பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை மெளனத்தின் குரலோசை கலை - இலக்கிய விமர்சகர் இந்திரன் வயலூர் சண்முகம் இன்று இருந்திருந்தால் அவருக்கு வயது எண்பத்து ஒன்று இருக்கும். இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நம்மிடையே இருந்து பிரிந்து விட்ட அவருக்குள், உயிர்த்துடிப்புடன் வாழ்ந்த உலகங்கள், மொழி எனும் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்டு, நம்மிடையே இன்று ஒப்படைக்கப் பட்டுள்ளன. புதுமை வீச்சுள்ள மரபுக் கவிதைகள் நிறைய எழுதியிருப்பினும் புதுக்கவிதைகளாக நமது பார்வைக்குள் கிடைப்பவை எல்லாம் சுமார் இருபத்தியேழு கவிதைகளின் பிரதிகள் மட்டுமே. இவற்றில் பெரும்பாலானவை அவருக்குச் சுமார் நாற்பத்தைந்து வயது இருக்கும்போது எழுதப்பட்டவை. - மழையை ரசிக்கிற, பசியைச் சபிக்கிற, புயலை வரவேற்கிற, நிசியை நேசிக்கிற, உணர்வு ரீதியான ஒரு மனிதரின் எழுத்துப் பதிவுகளில் சிக்கல்கள், சோகங்கள் இவற்றையும் மீறி, மெளனத்தின் புள்ளி தேடி, அதைத் தொட்டுத் தடவி, உள் நுழையப் பார்க்கிற ஒரு முயற்சி, இவரது கவிதைகளில் நாம் கவனம் கொள்ள வேண்டிய கட்டாயத்தை உண்டாக்குகின்றன.