பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூரில் திராவிட சிந்தனையும், மார்க்சிய இயக்கமும் ஒரு புயலைப் போல் மையம் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் பிறப்பெடுத்த இவரது கவிதைகள், "புதுக்கவிதை வழங்கிய சுதந்திரக் காற்றைச்சுவாசிக்கிற அதே நேரத்தில், அந்த காலகட்டத்துக்கேயுரித்தான சிந்தனைகளின் ரேகைப் பதிவுகளையும் தன்மேல் தாங்கி இருப்பதைக் காண முடிகிறது. எழுபதுகளின் கவிதை உலகம் நவீன தமிழ்க் கவிதை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு காலகட்டம். மனித நேயம், சமூக மாற்றம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்த வானம்பாடிகள் ஒரு பக்கமும், கவிதையில் அரசியல் பேசுவது என்பது கலையைக் காயப்படுத்திவிடும் என்று வாதிட்ட 'கசடதபற’க்கள் மறுபக்கமும் எதிர்எதிர்த்திசைகளில் சுறுசுறுப்பாக இயங்கிய காலகட்டம். இந்தக் காலகட்டத்தில்தான் வயலூர் சண்முகத்தின் இந்தக் கவிதைகளும் படைக்கப்பட்டன. "புயல்களே வாருங்கள்.... பூக்கள் நடுங்கினாலும் பாதகமில்லை புத்ர்கள் சிதற வேண்டும் பறவைகள் பயந்தாலும் பரவாயில்லை பாறைகள் சிதற வேண்டும்”. என்று பேசி முன்னேறும் இவரது கவிதையில், வாழ்க்கையை நேசிக்கிற மிக மென்மையான மனிதராக இருக்கிற வயலூர் சண்முகம், அதே நேரத்தில் வாழ்க்கையை வாழத் தகுதியுடையதாக மாற்ற வேண்டும் எனும் பிடிவாதம் கொண்டவராகவும் இருப்பதை நம்மால் காண முடிகிறது.