பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20



உழுததில் நான்கில் ஒரு பங்கு கூட தன்னால் உழ முடியவில்லையே என கவலை மிகக் கொண்டான்.

பொறாமை அவன் மன அமைதியைக் குலைத்தது. கடுகடுத்த முகத்தோடு இருந்த அவன் மனம் அலுப்பும் சலிப்பும் அடைந்தது. தான் கால் பங்குகூட உழாத நிலையில் பக்கத்து உழவன் உழவையே முடிக்கப் போவதைப் பார்த்து மனம் வெதும்பினான் இதை அவனால் தாள முடியவில்லை. அவனுக்கு மிகுந்த ஆக்ரோஷம் ஏற்பட்டது. உழுவதை நிறுத்தி விட்டு, ஒரு கல்லைத் தூக்கிக்கொண்டு ஆத்திரமாகக் கத்தியபடி அடுத்தவன் வயலுக்குள் ஒடினான். வரப்புத் தடுக்கியது, ஒடிய வேகத்தில், பொறுமையாக உழுது கொண்டிருந்த இரண்டாவது உழவன் அருகே கல்லோடு குப்புற விழுந்தான். அக்கல்லே அவன் தலையைத் தாக்கியது. இரத்தம் கொட்டியது. அப்போதே அவன் உயிரும் பிரிந்துவிட்டது. சாகும் போது அவன் கை அந்தக் கல்லைப் பிடித்தபடியே இருந்தது.

பொறுமையாக உழுது கொண்டிருந்த உழவனுக்கு எதுவுமே விளங்கவில்லை. கல்லைத் தூக்கிக்கொண்டு எதற்காக தன் அருகில் ஓடி வந்தான்? ஏன் கீழே விழுந்தான்? எப்படி உயிரைவிட்டான்? ஆகிய எதுவுமே அவனுக்குப் புலப்படவில்லை.