பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விடியலில் மலர்ந்து, மதியத்தில் வாடிச்சுருங்கி, மாலையில் வீழ்ந்து விடும் மலரல்ல, இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபை. வானத் தாய் பொழியும் பனித் துளிகளிலே நனைந்து, எழு ஞாயிற்றுக்கு முன்னே ஏழைகளின் கண்களிலே மிதந்து, மாண்டு போகும் ஈசற் பிறவிக் கட்சிகளை நாம் கண்டுள்ளோம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள இந்திய பூபாகத்துள், விடுதலை என்ற தென்றற் காற்றோடு கலந்து உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடெனும் கவின்மிகு மனத்தை இன்றும் பரப்பிக் கொண்டிருக்கும் மனோரஞ்சித மலர், காங்கிரஸ் - இந்திய தேசிய இயக்கம். அருந்தும் நீரையெல்லாம் பசு தனது உடலிலே பாலாகச்சுரந்து தந்து அவனி வாழ் மக்களைப் பேணிப் பாதுகாப்பது போல, வளர்ந்து வாழ்ந்து மக்களைக் காத்து வரும் காமதேனு இனம், காந்தியடிகளால் வளர்க்கப்பட்ட காங்கிரஸ் பேரியக்கம்! மாலைக் காலத்திலே தனது குஞ்சுகளுக்கு இரைதேடிக் கொண்டு செல்கின்ற பறவைகளைப் போல, சாலை ஓரத்திலே வாழ்கின்ற தரித்திர அடிமைகளுக்கும் சேர்த்து, சுதந்திரம் என்ற தன்மான உணர்வைத் தேடித் தந்த தெய்விகப் பறவை அது! அடர்ந்து படர்ந்திருந்த அடிமை இருளை அகற்றிட, அண்ணல் காந்தியடிகள் அருணனாகத் திகழ்ந்து, விடுதலை என்ற ஒளியை இந்தியா முழுவதும் பரப்பினார். உலரும் புற்களும் - உதிரும் பூக்களும் கூட, சுதந்திர மண்ணிலேதான் தோன்றி மறைய வேண்டும் என்ற உரிமை வேட்கையைப் பெற்றளித்தார்! அத்தகைய காங்கிரஸ் மகா சபை, நல்லொழுக்கம் நற்றொண்டு, நற்புகழ் என்ற மனித நேய உணர்வுகளால் நாளும் வளர்வதைக் காமராஜ் என்ற சிறுவர் கண்டார்!