பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


காண்கிறோம். மக்கள் வாழ்வு மாறிப் போகும் சமயங்களில் அறிஞர்கள் தோன்றி அதனை நல்வழிப்படுத்த முயன்று உள்ளனர். அவ்வாறு அறவுரை கூறி நல்வழிப்படுத்துவதிலும் முரட்டுத்தனத்தைக் கையாளாமல் மக்கள் மனம்போனபடி ஒரளவு அவர்கள் பின்சென்றே அறிஞர்கள் திருத்தியுள்ளனர். இக் காரணத்தால் தமிழ் மக்கள் தம்மைத் திருத்துவதற்காகத் தோன்றிய இலக்கியங்களைக்கூட மருந்தாக நினையாமல் இலக்கியம் என்றே நினைத்து அதில் ஊறிவிட்டனர். அவ்வாறு ஊறியதால் அவர்கள் வாழ்வோடு இணைந்த இலக்கியங்கள் மெல்லமெல்ல அவர்களுள் புகுந்து அவர்கள். வாழ்க்கையைத் திருத்தும் பணியைச் செய்யத் தொடங்கியது

இலக்கியத்தின் நோக்கம் அல்லது குறிக்கோள் யாது என்ற வினாவிற்குத் திறனாய்வாளர் இருவகை விடை அளிப்பர். கற்றார்க்கு இன்பஞ் செய்வதுடன் அவர்கள் வாழ்வைத் திருத்திச் செம்மை செய்வதும் இலக்கியத்தின் பயன் என்பர் ஒரு சாரார். படிக்கும் பொழுது இன்பஞ் செய்வது தவிர, வேறு பயனை விளைக்கக் கூடாது என்பர் மற்றொரு சாரார். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதற்கொள்கையே வலிவுற்றிருந்தது; இருந்தும் வருகிறது. இந்நாட்டில் தோன்றிய எந்த ஒரு சிற்றிலக்கியம் கூடப் பண்பை வளர்க்கும் பணியை ஓரளவு செய்யாமல் போகவில்லை. அவ்வாறு செய்யாத இலக்கியங்கள் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை போற்றுவாரற்று வழக்கு ஒழிந்தன. எனவே, படிக்கும்போது இன்பம் செய்வதோடு பின்னரும் நிலைத்து நின்று வாழ்வைத்திருத்தும் நல்லதொரு பணியைச் செய்கின்ற ஒன்றையே இலக்கியம் என்று நம் நாட்டவர்கள் கருதினார்கள்.