பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 185 இந்தக் கதையினுடைய அடிப்படையை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும் திருடனாக இருந்த ஒருவன் அச்சத்தின் காரணமாக மரத்தின் மேல் ஏறிக்கொண்டு கை நடுக்கம் தீர்வதற்காகத் தழைகளைப் பறித்துப் போட்டான். அத் தழைகள் தற்செயலாகக் கீழே இருந்த இலிங்கத்தின் மேல் வீழ்ந்து அதன் பயனாக அவன் சுவர்க்கம் சென்றான் என்றால் இதன் அடிப்படை யாது? அனைவரும் எல்லாத் தவறையும் செய்துவிட்டு இறுதியில் இவ்வாறு செய்து சுவர்க்கம் அடைந்துவிடலாம் என்று கருதிட வேண்டா. 'அஞ்சியாயினும் அன்புபட்டாயினும் இறைவனை வழிபட வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியதையே மற்றொரு வகையில் குறிக்கின்றது இக் கதை. இப்பெருநாளில் எவ்வாறா யினும் இறைவனை வழிபாடு செய்யவேண்டும். என்பதைத் தவிர இக் கதையால் அறியப்படுவது வேறு ஒன்றும் இல்லை. ஆண்டவனை வழிபாடு செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகத்தான் இந்தச் சிவராத்திரி மகாத்மியம் போன்ற பல கதைகள் எழுந்தன. சிவராத்திரியில் முக்கியமாக நாம் நினைக்க வேண்டியது ஆண்டவனைப் பற்றியாகும். ஆண்டவன் என்ற பொதுச் சொல்லினாலே சொன்னாலும். ஒன்றுதான். 'ஒரு நாமம் ஒருருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நசம் தெள்ளேனம் கொட்டாமோ?" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். கருவி, கரணம், கற்பனை அனைத்தும் கடந்து நிற்கின்ற கடவுளுக்கு எந்தப் பெயரைச் சொன்னால்தான் என்ன? அவ்வளவு பழங் காலத்திலேயே ஆண்டவன் வடிவில்லாதவன், முற்றறிவினன். எங்கும் நிறைந்தவன், சர்வ வல்லமையுள்ளவன் என்பவற்றை யெல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தது இந்த நாட்டினுடைய பெருமையாகும். அப்படியானால், அவனை எப்படித்தான் அழைப்பது? எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும் தவறில்லை, இன்னும் சொல்லப் போனால் செந்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்பான்’ என்று அருணகிரியார் கூறுகிறார். வைதுகூட ஆண்டவனை வழிபட முடியுமா? ஆம்