பக்கம்:தேடி வந்த குயில்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் விளக்குகளை ஏற்றிய திருவிளக்கு அப்பொழுது நான் கோனாபட்டு சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன், நான்காவது படிவம் என்று நினைக்கிறேன். கோனாபட்டில் தமிழ் இளைஞர் கழகம் ஒன்று இருந்தது. அந்தக் கழகத்தின் செயலாளர் முருகு சுப்பிரமணியன். தமிழ் இளைஞர் கழகத்தினர் எல்லாம் தமிழில்-அதுவும் தனித்தமிழில் நடைபெற வேண்டும் என்ற கொள்கை யுடைய வர்கள். நடை முறையில் தனித்தமிழ் பழக்கத்திற்கு வர வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள். மறைமலை யடிகளின் கனவை நனவாக்கப் பிறந்த உறுதிபடைத்த இளம் வீரர்கள். அவர்களை வழிநடத்திய முருகு சுப்பிரமணியன் அவர்களும் அப்போது இளைஞரே. இளைஞர் கழகத்தினர் மாலை நேரத்தில்: ஒன்றுகூடி விளையாடுவார்கள், அப்போது செட்டிநாட்டில் மிகுதியாக ஆடப்பெற்ற விளையாட்டு பாட்மிண்டன். அதையேதான் கோனாபட்டு இளைஞர் கழகத்தினரும் விளையாடினார்கள். மற்ற ஊர்களில் பாட்மிண்டனாக ஆடப்பெற்ற விளையாட்டு கோனாபட்டில் பூப்பந்தாக விளையாடப் பெற்றது. விளையாட்டில் பயிலும் சொற்களும் தனித் தமிழிலேயே கையாளப் பெற்றன.