பக்கம்:தேடி வந்த குயில்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

தேடிவந்த குயில்


"யாரும் வேண்டியதில்லை. நீங்கள் பேசுங்கள். உங்கள் பேச்சை அருகில் வந்து கேட்க மாட்டார்கள். தொலைவில் பாருங்கள். அங்கங்கே வீட்டுதிண்ணையிலும், மரத்தடிகளிலும் நிற்கிறார்கள். அவர்கள் நிச்சயம் கேட்பார்கள். அவர்கள் மூலம் ஊர் முழுவதும் உங்கள் பேச்சுப் பரவிவிடும்" என்று நான் கூறினேன். - “சரி, நீங்களாவது எதிரில் வந்து உட்காருங்கள்' என்றார். நாங்கள் பத்துப்பேரும் எதிரில் வந்து உட்கார்ந்தோம், கவிஞர் பேசத் தொடங்கினார். தன்மானக் கொள்கைகளை மிகத் தெளிவாக-மிக அமைதியாக- அறியாச் சிறுவரும் புரிந்து கொள்ளும்படியாக ஒருமணி நேரம் விளக்கமாகப் பேசினார். தன்மானக் கருத்துக்களை அவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் அதுவரை யாரும் எடுத்துப் பேசியதாக நான் நினைக்கவில்லை. பொருளைத் திட்டவட்டமாக வகுத்துக் கொண்டு, பச்சை மரத்தில் ஆணி யடிப்பதுபோல் மனத்தில் பதியும்படி புதுமைக் கொள்கைகளை அன்று விளக்கிப் பேசியதுபோல், அவரே கூட அதற்கு முன்னும் பின்னும் பேசியிருக்க மாட்டார் என்றே நான் எண்ணுகிறேன், அவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தது அவருடைய ஆத்தங்குடிப் பேச்சு. கூட்டம் முடிந்தவுடன் தியாகராசர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றோம். தியாகராசர் வீட்டில் அருமையான புலால் விருந்து கவிஞருக்கென்று சிறப்பாகத் தயாரிக்கப் பட்டிருந்தது.