பக்கம்:தேன்பாகு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7

ஏதாவது துணியிருக்குமா என்று சுற்று முற்றும் பார்த்தான். ஒன்றும் கிடைக்கவில்லை. அந்தப் பெரிய அறைக்கு அருகில் ஒரு சிறிய அறை இருந்தது. அதில் மெத்தை தைப்பதற்காகப் பஞ்சு வாங்கிப் போட்டிருந்தார்கள். அதில் விழுந்து புரண்டான், உடம்பெல்லாம் பஞ்சு ஒட்டிக் கொண்டது. புஸு புஸு வென்று உடம்பு முழுவதும் பஞ்சு மயமாக ஆகிவிட்டது. அந்தக் கோலத்தில் அங்கே இருக்கக் கூடாதென்று எண்ணி வாயிற்கதவைத் திறந்து வெளியே புறப்பட்டான்.

இரவு நேரத்தை எங்காவது கழித்துவிட்டு விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடிய பிறகு வரலாம் என்ற நினைவுவர புறப்பட்டுச் சென்றான். போகும் வழியில் ஓர் ஆட்டுப்பட்டி இருந்தது. அதற்குள் புகுந்து ஆடுகளோடு ஆடாக முடங்கிக் கிடந்தான். எப்பொழுதப்பா விடியும் என்று காத்திருந்தான்.

அன்று ஆடு திருடும் கள்ளர்கள் வந்தார்கள் பெரிய ஆடாகத் திருடவேண்டுமென்று எண்ணித் தேடினார்கள் உடம்பெல்லாம் பஞ்சு முடியிருந்ததனால் கோபாலனை அவர்கள் ஏதோ பெரிய ஆடு என்று நினைத்துத் தூக்கிக்கொண்டு போனார்கள். இடைவழியில், “இது என்ன, இவ்வளவு கனமாக இருக்கிறது!” என்று கீழே போட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/9&oldid=1301355" இலிருந்து மீள்விக்கப்பட்டது