பக்கம்:தேன் சிட்டு.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆமையும் முயலும்

ஆமையும் முயலும் ஒட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட கதையைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். முயல் வெகு வேகமாகப் பாதித் தொலைவிற்கு ஓடிற்று. ஆமை அதற்குள்ளாகப் பத்தடிகூட நகரவில்லை. அதை அறிந்து இறுமாந்த முயல் கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டுப் போகலாமே என்று செடி மறைவில் படுத்து நன்றாக உறங்கிவிட்டது. உள்ளந் தளராமல் விடா முயற்சியோடு ஊர்ந்து சென்ற ஆமை போட்டியிலே வெற்றி பெற்றது. ஆமையின் வெற்றியைக் கண்டு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சி உண்டாகிறது. முயலைப்போல வேகமாகச் செல்லும் நாடுகள் உலகத்திலே பல உண்டு; ஆமைக் கூட்டத்திலே சேர்ந்த நாடுகளும் உண்டு. ஏன், நாடுகள் மட்டுமா இப்படிச் சாதி பிரிகின் றன? மனிதருக்குள்ளேயும் இவ்வாறு இனம் பிரிகின்றவர்கள் இருக்கிறார்கள். சில வகுப்பினர் எப்படியோ முயலின் வேகத்தைப் பெற்று முன்னேறியிருக்கிறார்கள்; சில வகுப்பினர் இப்பொழுதுதான் காலடியெடுத்துவைத்து நகரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆமைக்குள்ள விடாமுயற்சியும் மனத்திடமும் அவர்களுக்குண்டோ என்னவோ இனிமேல்தான் தெரிய வேண்டும்.