பக்கம்:தேன் சிட்டு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தேன் சிட்டு


 ஆமையாகிவிடுவான். எனது நண்பன் வீராசாமி பேசத் தொடங்கினால் நயாகரா அருவி தோற்றுப் போகும். உலகமே அதிரும்படி அவன் வேகமாகப் பேசுவான்; செய்கைக்கு வரும்போது ஆமையின் வேகத்தை அவனால் எட்டிப் பிடிக்க முடியாது. அதனால் நான் அவனை இழிவாகக் கருதுவதில்லை. அவனுடைய பேச்சில் வேகம் ஆயிரம் பேரைச் செயலிலே தூண்டுகிறது. அது பெரிய சாதனையல் லவா?

வேகமாகச் செயலிலே ஈடுபடுகின்றவர்களும் உள்ளத்திலே பதட்டமில்லாது அமைதியாக இருக்க வேண்டும் என்று நமது நூல்கள் கூறுகின்றன. கண் தெறிக்கும் வேகத்திலேயும் ஆழ்ந்த அமைதியைக் காணவேண்டும். முயலுக்குள்ளே ஆமையையும், ஆமைக்குள்ளே முயலையும் கண்டவன் வாழ்க்கையின் இரகசியத்தைக் கண்டவனாகிறான் என்று கூறும் போது அது ஒரு புதிர்போலத் தோன்றினலும் உண்மையான வாக்கு. வேகமாகச் சுற்றும் பம்பரம் ஓரிடத்திலே அசையாது நிற்கிறது; 'பம்பரம் தூங்குகிறது' என்று கூறுகிறோம். "அந்தப் பம்பரத்தின் தூக்கம் நமக்கு வாய்க்கவேண்டும். அந்தப் பம்பரத்தைப்போல நாம் சும்மா இருப்பதே சுகம்" என்று ஞானிகள் கூறுகிறார்கள். அண்டங்களையெல்லாம் படைத்தும் காத்தும் அழித்தும் அளவில்லாத தொழில் புரியும் இறைவன் சாந்திமயமானயோகத் திலிருக்கிறான். அவனுடைய ஆனந்த நடனம் செயலையும் சாந்தியையும் ஒருங்கே காட்டுகின்றது. வேகத்திற்கும் அதே வேளையில் அமைதிக்கும் அந்த நடனம் சின்னமாக விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/17&oldid=1141798" இலிருந்து மீள்விக்கப்பட்டது