பக்கம்:தேன் சிட்டு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முருங்கைமர வேதாளம்

29


வனின் வடிவம்; அன்பின் மூலமாகவே இறைவனை எளிதில் அடையலாம்" என்று நாயன்மார்களும், ஆழ்வார்களும் போதித்திருக்கிறார்கள். 'அன்பே சிவம்' என்றார் திருமூலர். அன்பின் வழியது உயிர் நிலை என்றார் திருவள்ளுவர். அன்பு, வாய்மை, கொல்லாமை ஆகியவற்றோடு அருளுடைமை இன்ன செய்யாமை என்பவற்றின் பெருமையையும் திருவள்ளுவர் மிக அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார். இவற்றைப் பற்றிய ஐந்து அதிகாரங்களே உலகத்தின் பொது மறையாகத் திகழ்வதற்குப் போதுமானவை. உலகத்தை இன்ப வீடாக்குவதற்கு வள்ளுவம் இவற்றின் மூலம் தெளிவாக வழி வகுத்துள்ளது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உள்ளப் பான்மையோடு வாழ்ந்தால் கவலையற்ற வாழ்வு கிடைக்கும் என்று சங்க காலத்துக் கவிஞர் குறிப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது மனிதனுடைய உள்ளம் உயர்வடைகிறது. தன்னலம் முதலான வேதாளங்களைக் கட்டிப்பிடித்து அடக்கியொடுக்க வேண்டுமென்ற உணர்வு பிறக்கின்றது. போர் வேண்டாம், அனைவரும் உடன்பிறந்தார் போல வாழலாம் என்ற ஆர்வம் உண்டாகிறது. ஆனால் மனிதன் எப்பொழுதுமே எச்சரிக்கையாக இருப்பதில்லை. தனது பிடியைத் தளர்த்திவிடுகிறான். அவனுடைய அறிவு கொஞ்சம் உறங்கி விடுகிறது. வேதாளங்கள் பழையபடி முருக்க மரத்தின்மேல் ஏறிக்கொள்ளுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/30&oldid=1142829" இலிருந்து மீள்விக்கப்பட்டது