பக்கம்:தேன் சிட்டு.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37
முரண்பாடுகள்

எல்லா மக்களும் இன்பமெய்தி வாழவேண்டும் என்ற எண்ணம் உண்மையாக இருக்குமானால் முரண்பட்ட கொள்கைகளைப் பற்றி அஞ்சவேண்டியதில்லை. ஒரே சிகரத்தை நாடி இருவர் வேறு வேறான கோடிகளிலிருந்து புறப்படலாம். குறிக்கோள் ஒன்றாக இருக்கும் வரையில் அவர்கள் பகைமை கொள்ள வேண்டியதில்லை. உள்ளத்திலே நேர்மையும் பரிவும் இருந்தால் மனித சாதியின் நலத்தை நாடுவோர் தாம் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு அவற்றால் புதிய வலிமை பெற்றுத் தமது இலட்சியத்தில் வெற்றியடைய முன்னேறலாம் பிறருடைய அனுபவத்தில் உள்ள நல்ல பகுதிகளை ஏற்றுக்கொள்வதிலே சிறிதும் தயக்கமோ ஐயமோ வேண்டுவதில்லை. அறிவு வாய்ந்த மனிதனுக்கு இந்தத் துணிச்சல் வேண்டும். இதுவே சமுதாயத்தை நிலைபெறச் செய்வதற்கு இன்று முக்கியமானதாகும்.