பக்கம்:தேன் சிட்டு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழலோசை

41



"மாட்டுப் பொங்கலுக்குக் குழல் அத்தனை அவசியமா?”

"குழலூதாமல் பொங்கலேது? பட்டியே அமங்கலமாகப் போகும்" என்றான் சிறுவன்.

"நீ குழலூதுவது மாட்டிற்குத் தெரியுமா?”

"ஒ நல்லாத் தெரியும், சாயங்காலத்திலே நான் குழல் ஊதினால் மாடுகளெல்லாம் எங்கிருந்தாலும் என்னைத் தேடிக்கொண்டு வந்துவிடும்."

"உனக்குச் சொந்தமாக மாடிருக்கிறதா?”

"இந்த மாடெல்லாம் என்னுடையதுதான் - நான்தான் அவைகளை மேய்க்கிறவன்" என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு பக்கத்திலே பட்டியிலிருந்த மாடுகளைக் காண்பித்தான் சிறுவன்.

அந்த மாடுகளை மேய்ப்பவன் அவன்தான். ஆனால் அவற்றின் சொந்தக்காரன் அவனல்ல என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். அவன் பெரிய பண்ணைக்காரர் பட்டியிலே மாடு மேய்க்கிறவன்.

இருந்தாலும் அந்த மாடுகளையெல்லாம் தன்னுடையதாகவே அவன் கருதுகிறான். அத்தகைய மனப்பான்மை எப்படி உண்டாக முடியும் என்று எண்ணிக்கொண்டே நான் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன்.

சற்று தூரம் சென்றதும் மறுபடியும் புல்லாங் குழலின் ஒலி மதுரமாகக் காற்றில் மிதந்து வந்தது. அந்த இசையில் லயித்துப் போனவன்போலக் கதிரவன் மெதுவாக எட்டிப் பார்த்தான், அவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/42&oldid=1147619" இலிருந்து மீள்விக்கப்பட்டது