பக்கம்:தேன் சிட்டு.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54
தேன் சிட்டு

ஆனால் கழனிகளிலே மாசற்ற அமைதியிலும் எளிமையிலும் முழுகிக் களித்துவிட்டு வந்த எனக்கு அந்த நொடியில் செய்தித்தாள் கசந்தது. கழனிக்காட்சி என் உள்ளத்தில் எழுப்பிய அமைதியின் நாதத்திற்கு அது ஒத்திசைக்கவில்லை. ஏதோ முற்றிலும் மாறுபட்ட அபசுரம் பேசியதுபோல் நான் உணர்ந்தேன்.

இப்படி உணர்ந்தாலும் செய்தித்தாளைப் படிக்காமல் இருக்க முடிகிறதா? அதுதானில்லை.

உலகத்திலே அமைதியை நிலைநாட்ட இன்று எத்தனையோ முயற்சிகள் நடந்து வருகின்றன. இனி மேல் போர் வருமானால் உலகம் அழிந்து போகும் என்று பலரும் அறிந்து அதைத் தவிர்க்கப் பாடுபடுகிற செய்தியை நாள் தவறினாலும் செய்தித்தாள் தவறாமல் தாங்கி வருகின்றது. ஒவ்வொரு நாடும் அமைதியை நிலைநாட்ட எடுத்துவரும் முயற்சிகளை நாம் நாளும் படிக்கிறோம். அதே சமயத்தில், இந்த அமைதி முயற்சியைக் குலைப்பதற்குப் பிற நாடுகள் என்னென்ன செய்கின்றன என்று கூறும் குற்றச்சாட்டுக்களையும் படிக்கிறோம். ஒவ்வொரு நாடும் பிற நாட்டை ஐயம், அச்சம் என்ற கண்ணாடிகளின் வழியாகப் பார்க்கிறது.

அதனால்தான் செய்தித்தாளைப் படிக்கிறபோது மானிட சாதியின் எதிர்காலத்தைப்பற்றிக் கவலை ஏற்படுகிறது. ஆனால் சாமந்திப் பூக்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் தோட்டக்காரனையும் அவனைச்