பக்கம்:தேன் சிட்டு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தேன் சிட்டு


அதிகாலையிலே எத்தனை பறவைகள் இந்தச் சிறிய தோட்டத்திற்கு வருகின்றன! நான் படுக்கையிலிருக்கும் போதே கரிச்சான் என்னும் இரட்டை வால் கரிக்குருவி என்னை எழுந்திருக்குமாறு கூவியழைக்கிறது. காகம் கரைவதற்கு முன்னாள், சேவல் தன் குரலெடுத்துக் கதிரவன் வருகையை உலகத்திற்கு அறிவிப்பதற்கும் முன்னாலேயே கரிச்சான் கூவத் தொடங்கி விடுகிறது. "கரிக்குருவி கூவுகிறது. விடியும் நேரமாகிவிட்டது. வேலைக்குப் புறப்படலாம்” என்று எங்கள் ஊரிலே உழவர் பேசிக்கொள்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.

இந்தக் கரிச்சானுக்குத் தரையிலே அமர்வது அவ்வளவு பிடிக்காது. வசதியான உயர்ந்த இடத்தில் அமர்ந்துகொண்டு பறந்து வரும் பூச்சிகளை அது வேட்டையாடும். புனங்களிலே மேயும் செம்மறி ஆட்டின் முதுகிலே அமர்ந்து பூச்சி வேட்டையாடுவதில் இதற்கு அலாதியான விருப்பம் உண்டு. செம் மறியாடு மேய்ந்துகொண்டே செல்லும்; அதன் காலருகிலே புல்லில் பதுங்கியிருக்கும் விட்டில் முதலிய பூச்சிகள் அஞ்சித் தாவி வேறிடத்திற்குப் பறந்து செல்ல முயலும். கரிச்சான் ஒரே பாய்ச்சலிலே பாய்ந்து அவற்றை ஒவ்வொன்றாக தன் வாயிலே போட்டுக்கொள்ளும். இந்தக் குருவியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/8&oldid=1156043" இலிருந்து மீள்விக்கப்பட்டது