பக்கம்:தைத் திங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 99

மயிலை நாதரின் உரையமைந்த ஒரு சில ஓலைச் சுவடிப் படிகளில், தைந் நீர் ஆடினார் என்பதற்குப் பதிலாக, சித்திரை நீராடினார் என்றும் ஆதிரை நீராடினார் என்றும் பாட வேறுபாடுகள் இருப்பதாக, தமிழ் ஐயா உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தமது மயிலை நாதர் உரைப் பதிப்பில் எடுத்துக் காட்டி யுள்ளார்கள். எனவே, ஆதிரை நீராடலும் தமிழகத்தில் தனக்கென ஒரு தனிச்சிறப்பிடம் பெற்றிருந்தமை புலனாகும்.

ஆண்டாளைப் போலவே மாணிக்கவாசகரும் தமது திருவெம்பாவையில் மார்கழி நீராடலைப் பற்றிக் கூறி யுள்ளார். அப்பகுதிகள் வருமாறு:-

"மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையால் குடைந்து குடைந்துன் கழல்பாடி"

(11)

"பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி யிருஞ்சுனைநீர் ஆடேலோ ரெம்பாவாய்"

(12)

'பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோ ரெம்பாவாய்'

(13)

‘ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோ ரெம்பாவாய்’

(15)

'பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோ ரெம்பாவாய்'

(18)

'போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோ ரெம்பாவாய்'

(20)

என மணிவாசகர் ஆண்டாளினும் மிகுதியாக நீராடலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர் ஆதிரை நாளைக் குறிப்பிடாமல், ஒரே ஓரிடத்தில் மட்டும் பொதுவாக மார்கழி நீராடலைக் குறிப்பிட்டுப் போந்துளார். மற்றும் இவர் ஆண்டாளைப் போலவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/116&oldid=1321667" இலிருந்து மீள்விக்கப்பட்டது