பக்கம்:தைத் திங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 தைத் திங்கள்

இம்மட்டில் நிறுத்தித் தைத் திங்களுக்கு வருவோம். தமிழகத்தில் அறுவடை முடிந்து புது நெல் குத்திப் புதுப் பானையில் பொங்கலிட்டுப் புதுக் கதிரும் வைத்துப் படைக்கும் பொங்கல் விழா, உலகின் பல பகுதிகளில் நடைபெறும் அறுவடை விழாவிற்கு நிகராக ஈடு கொடுக்கிறதல்லவா? எனவே, இதனை ஒரு வகையில் அறுவடை விழா' எனவும் வழங்கலாமே! உலக நாடுகளில் அறுவடை விழாவின்போது நடைபெறும் விருந்துகளும் களியாட்டங்களும் தைப் பொங்கல் நாளிலும் நடைபெறுவதால், இதனை அறுவடை விழா என மேளதாளத்துடன் வழங்கலாம்.

வயலில் உழைத்த உழவர்கள் பொங்கல் நாளில் விருந்தளிக்கப்பெற்றும், புத்தாடை, பணம் முதலியன பரிசளிக்கப் பெற்றும் போற்றப்படுவதால் இதனை 'உழவர் திருநாள்' என்று வழங்குதலும் உண்டு. 'அறு வடை விழா' என்னும் பெயருக்கும் 'உழவர் திருநாள்' என்னும் பெயருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று சொல்லத் தேவையில்லை. மற்றும், தை இரண்டாம் நாள் நடைபெறும் மாட்டுப் பொங்கல் விழாவும் அறுவடை விழாவோடு மிகவும் நெருக்கமான தொடர்புடையது என்பது சொல்லாமலே விளங்கும். அந்த நாளில்-ஏன், நம் நாட்டில் இந்த நாளிலுங்கூட, மாடுகள் இன்றி உழவு ஏது? அறுவடை ஏது? 'பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க' என்பது நாலடியார். 'பகடு நடந்த கூழ்' என்றால் மாடுகள் நடந்து உழுததனால் உண்டான உணவு' என்று பொருளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/125&oldid=1323564" இலிருந்து மீள்விக்கப்பட்டது