பக்கம்:தைத் திங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

111


உலகப் புத்தாண்டு:

ஆண்டுதோறும் சனவரி முதல் நாள் உலகப் புத்தாண்டுப் பிறப்பாக இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் பெறுகிறது. இந்த நாளில் உலக மக்கள் சாதி-சமய-இன-நிற மொழி-நாடு-கட்சி வேறு பாடுகளையெல்லாம் மறந்து ஒருவர்க் கொருவர் வாழ்த்து நேரிலும் அஞ்சல் வாயிலாகவும் வழங்குதல், பரிசளித்தல், விருந்தளித்தல் முதலியன செய்து உறவாடுகின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் களியாட்டங்களும் நடைபெறுகின்றன. எப்படியோ சனவரி முதல் நாள் உலக மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்து விட்டது. இது வரலாற்றின் திருவிளையாடலாகும்.

இந்த உலகப் பெருஞ் சனவரித் திருநாளை யொட்டினாற்போல் தமிழர்களின் தைத் திங்கள் தொடங்குவது ஒருவகை இயற்கைப் பொருத்தமாகும். சனவரியில் செய்வது போலவே, தைத் திங்கள் பொங்கல் நாளிலும் ஒருவர்க்கொருவர் பொங்கல் பரிசும் பொங்கல் வாழ்த்தும் பரிமாறிக் கொள்வது மரபாயிருக்கிறது. வெளியூர்களிலுள்ள நண்பர்களும் உறவினர்களுங்கூட அஞ்சல் வாயிலாகப் பொங்கல் வாழ்த்து அனுப்பிக் கொள்வது சிறந்த மரபாய்த் திகழ்09கிறது. உலகப் புத்தாண்டாகக் கருதப்படும் சனவரியை யொட்டினாற்போல் தமிழ்ப் புத்தாண்டாகத் தைத் திங்கள் அமைந்திருப்பதில் ஏதோ பொருள் உள்ளது. இது பின்னர்ப் பேசப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/128&oldid=1321678" இலிருந்து மீள்விக்கப்பட்டது