பக்கம்:தைத் திங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 தைத் திங்கள்


கிறித்துவர் பொங்கல்:

வாழையடி வாழையாகப் பொங்கல் விழா செய்து பழகிய மரபில் வந்த கிறித்துவர்கள் சனவரி ஆறாம் நாளில் பொங்கல் விழா கொண்டாடுவது புதுச்சேரியில் இன்றும் நடைபெறுகிறது. இதற்குக் 'கிறித்துவர் பொங்கல்' என்று வழங்கப்படுகிறது. வேறு சில ஊர் களில் கிறித்துவர்களிடையே இது நடைபெறுவ தில்லை. சனவரி பதினான்கு அல்லது பதினைந்தாம் நாளில் முறையான பொங்கல் விழா தொடங்குவதற்கு முன்பே, சனவரி ஆறாம் நாளிலேயே புதுச்சேரிக் கிறித்துவர்கள் பொங்கல் விழா கொண்டாடுவது போற்றுதலுக்கு உரிய ஒரு செயலாகும்.

மகர சங்கிராந்தி:

தைத் திங்களின் தொடக்க நாள் இந்தியா முழுதும் "மகர சங்கிராந்தி' என்னும் பெயரில் கொண்டாடப் பெறுகிறது. 'சங்கிராந்தி' என்ற சொல்லுக்கு, ஓர் இராசியிலிருந்து மற்றோர் இராசிக்குப் போகும் செயல் - என்பது பொருளாம். யார் போகும் செயல் சங்கிராந்தியாகும்? ஞாயிறு, திங்கள், செவ்வாய் முதலிய கோள்களுள் எந்தக்கோள் (கிரகம்) ஓர் இராசியிலிருந்து மற்றோர் இராசிக்குப் போனாலும் அது சங்கிராந்திதான். ஆனால். தலைமை பற்றி, ஞாயிறு ஓர் இராசியிலிருந்து மற்றோர் இராசிக்குப் போகும் செயலே சங்கிராந்தி எனச் சிறப்பாகக் குறிப்பிடும் மரபு எப்படியோ ஏற்பட்டு விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/129&oldid=1321680" இலிருந்து மீள்விக்கப்பட்டது