பக்கம்:தைத் திங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 தைத் திங்கள்


வரும்போது "மகர சங்கிராந்தி' எனவும் இரண்டே சங்கிராந்திகள் கூறுவதே மரபாயுள்ளது. கடக சங்கிராந்தி என்பது ஆடித் திங்கள் பிறப்பாகும். மகர சங்கிராந்தி என்பது தைத் திங்கள் பிறப்பாகும். இவ்விரண்டினுள்ளும் தைத் திங்கள் பிறப்பாகிய மகர சங்கிராந்தியே மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது; இதனால், சங்கிராந்தி என வெற்றுபடியாகச் சொன்னாலுமே,தைத் திங்கள் பிறப்பு என்று பொருள் கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிட்டது. ஞாயிறு இராசி விட்டு இராசி மாறும் பன்னிரண்டு சங்கிராந்தி களுள் கடக சங்கிராந்தியும் மகர சங்கிராந்தியுமே சங்கிராந்தி என்னும் பெயரால் வழங்கப்படுவதற்கு உரிய காரணமும் இவ்விரண்டினுள்ளும் மகர சங்கிராந்தியே மிகவும் சிறந்ததாகப் போற்றப் படுவதற்கு உரிய காரணமும் இனி விளக்கப்படும்.

வட செலவும் தென் செலவும்:

ஞாயிறு காலையில் கிழக்கே தோன்றி மாலையில் மேற்கே மறைவதுபோல் நமக்குத் தோன்றுகிறது. நாம் வாழும் நில வுருண்டை கிழக்கு நோக்கி தன்னைத் தானே சுழற்றிக்கொண்டு ஞாயிற்றையும் சுற்றுவதால் இவ்வாறு நமக்குத் தெரிகிறது.ஞாயிறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்வதுபோல் தோன்றினும், நாம் கிழக்கு நோக்கி நிற்போமாயின், நமக்குமுன் நேர் கிழக்கே ஞாயிறு தோன்றி நமக்குப்பின் நேர் மேற்கே ஞாயிறு மறைவதுபோல் தெரியாது. தைத் திங்கள் தொடங்கி ஆனித்திங்கள் வரையிலுமான ஆறு திங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/131&oldid=1323722" இலிருந்து மீள்விக்கப்பட்டது