பக்கம்:தைத் திங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

125


படுகிறது. இஃது ஒரு கொள்கை. இப்போது பலர் தைத்திங்களின் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு எனக் கூறிக்கொண்டாடுகின்றனர். இஃது ஒரு கொள்கை. இம்மூன்று கொள்கைகளிலும் ஏதேனும் உண்மை உள்ளதா? ஏதேனும் பொருத்தப்பாடு புலப் படுகிறதா?- எனக் காண ஒவ்வொன்றாக ஆய்வாம்:

சித்திரைப் பிறப்பு:

உலகப் பெருவெளி பன்னிரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளமையும், ஒவ்வொரு கட்டமும் இராசி என்னும் பெயரால் வழங்கப்படுகின்றமையும், மேடம் முதல் மீனம்வரை இராசிகள் பன்னிரண்டா யுள்ளமையும், மேடம் முதலான பன்னிரண்டு இராசிகளுக்கும் சித்திரை முதலாகப் பங்குனி ஈறாக உள்ள பன்னிரண்டு திங்கள்களும் முறையே உரியனவாயுள்ளமையும், திங் களுக்கு ஒரு முறை ஞாயிறு இராசிவிட்டு இராசி மாறும் முறைமையும் முன்பே (பக்கம்-113) விளக்கப் பட்டுள்ளன. இந்த அடிப்படையில் நோக்குங்கால், முதல் இராசியாகிய மேட இராசிக்கு, முதல் திங்களாகிய சித்திரை உரியது என்பது புலப்படும். ஞாயிறு மேட இராசியில் இருக்கும் காலம் சித்திரைத் திங்களாகும். ஞாயிறு மேட இராசி வீட்டில் வந்து தங்கியிருக்கும் போது 'உச்சம்' (உயர் வன்மை) பெற்றுவிடுகிறான் என்பது கணிப்புக் கலையின் முடிபு. எனவே ஞாயிறு 'உச்சம்' பெற்றிருக்கும் மேட வீட்டுத் திங்களாகிய சித்திரை ஆண்டின் தொடக்கமாகக கொள்ளப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/142&oldid=1323736" இலிருந்து மீள்விக்கப்பட்டது