பக்கம்:தைத் திங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

135


முறையிலேயே மாதங்களின் பெயர்களை வழங்கு கின்றனர். மாதத்தின் பெயரோடு திங்கள் என்னும் சொல்லையும் இணைத்துச் சொல்வது இன்னும் அழகாயிருக்கிறது. இந்த அழகினைத் 'தைத் திங்கள் என்னும் தித்திக்கும் சங்க நூல் வழக்காற்றில் கண்டு சுவைக்கலாம். தைத் திங்களின் தித்திப்பைச் சர்க்கரைப் பொங்கலும் பொங்கல் கரும்பும் இன்னும் மிகுதியாக்குகின்றன.தித்திக்கும் தைத் திங்கள் வாழ்க!

தண்ணிய தைத் திங்கள்:

தமிழ் மொழி 'தண் தமிழ். எனச் சிறப்பிக்கப் பெற்றிருப்பது போலவே, தைத் திங்களும் தண்மைக்குப் பெயர் பெற்றதாகச் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. 'தைஇத் திங்கள் தண்கயம் போல’ (புறம்-70)'தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' (குறுந்தொகை-196), 'தைஇத் திங்கள் தண்கயம் படியும்' (நற்றிணை-80) 'தைஇ நின்ற தண்பெயல் கடை நாள்'(அகம்-24) தைஇத் தண்கயம் போல' (ஐங்குறு நூறு-84) 'தண்ணீர்த் தைஇ நின்ற பொழுதே' (நற்றிணை-124) முதலிய சங்க நூல் வழக்காறுகளில் தண்மைக்கும் தைத் திங்களுக்கும் உள்ள பிரிக்க முடியாத பிணைப்பைக் காணலாம். தைத் திங்களின் தண்மை உடலுக்குக் குளிர்ச்சியளிப்பது போலவே, தைத் திங்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளத்திற்குக் குளிர்ச்சியளிக்கின்றன. இத்தகு தண்ணிய தைத் திங்கள் தண் தமிழேபோல் வாழ்க!

பொங்கலோ பொங்கல்!பால்பொங்கலோ பொங்கல்! வள்ளுவர் முப்பால் பொங்கலோ பொங்கல்! வளம் பொங்கி வையகம் வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/152&oldid=1323748" இலிருந்து மீள்விக்கப்பட்டது