பக்கம்:தைத் திங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

5


சாதியாராலேயோ, ஒரு சமயத்தாராலேயோ நடத்தப் படுவனவாம். நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான மக்களால் பலநாள் தொடர்ந்து நடத்தப்பெறும் விழா பொங்கல் விழா ஒன்றேயாகும். எனவேதான் இது, தமிழகத்தின் 'நாட்டு விழா' என நவிலப்படுகிறது. இஃதல்லாத விழாக்களுள் சில சில்லறை விழாக் களாகும்; வேறு சில இறக்குமதிச் சரக்குகளாகும். உள் நாட்டுப் பெருவிழா பொங்கல் விழா ஒன்றே-ஒன்றே!

வீட்டு விழா:

பொங்கல் விழாவை நாட்டு விழா என்றோம். அது மட்டுமன்று: இது வீட்டு விழாவுமாகும். சில விழாக்கள் கோயில்களிலே மட்டும் நடைபெறும். சில விழாக்கள் பொது மன்றங்களிலே மட்டும் நடை பெறும்; சில விழாக்கள் தெருக்களிலே மட்டும் நடை பெறும்; அவை வீட்டிலே நடைபெறுவதில்லை. வீட்டிலே நடைபெறுமாயினும், அரை நாள் - ஒரு நாளோடு சரி. பொங்கல் விழாவோ, நாட்டிலே நடப்பதன்றி வீட்டிலும் நடைபெறும். வீடுகள் பல சேர்ந்ததே நாடு அல்லவா? வீட்டிலே மகிழ்ச்சி நிகழ்ச்சியின்றி நாட்டிலே மட்டும் வெளிச்சம் போடுவது விழாவாகுமா? நாட்டிலும் வீட்டிலும் ஒரு சேர நடைபெறுவதே நாட்டு விழாவாகும். ஒரு வீட்டினர் தம்மோடு அமைந்து விடாமல், நாட்டினரோடும் கலந்து உறவாடுவதே நாட்டு விழாவாகும். இவ் வகையில், பொங்கல் விழா, நாட்டு விழாவின் ஓர் உறுப்பாகிய வீட்டு விழாவாகவும் திகழ்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/22&oldid=1323583" இலிருந்து மீள்விக்கப்பட்டது