பக்கம்:தைத் திங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

11


தொல்காப்பியர் கூறியுள்ளார். 'வேந்துறு தொழிலே யாண்டினது அகமே 'என்பது தொல்காப்பிய நூற்பா. மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியர் எவ்வளவு நுணுக்கமான செய்தியைச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்! இது மட்டுமா? உயர் கல்விக்காகப் பிரிந்து செல்பவர்கள் மூன்று ஆண்டு காலத்தில் திரும்புவர் என்கிறார். இப்பொழுது டாக்டர்-Ph D. என்னும் ஆராய்ச்சிப் பட்டப் படிப்புக்கு மூன்றாண்டு செலவழிக்கிறார்கள் அல்லவா? 'வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது’ என்பது தொல்காப்பிய (கற்பியல்-47) நூற்பா.

இத்தகைய பிரிவுகளுள் அரசியல் வேலையாகப் பிரிபவர் ஓராண்டு காலத்தில் வந்து விடுவார். சித்திரைத் திங்களில் பிரிந்தால் தைத்திங்களில் திரும்பி விடுவார் - அல்லது - மாசித் திங்களில் பிரிந்தாலும் தைத்திங்களில் திரும்பி விடுவார் - எந்தத் திங்களிலே பிரியினும் தைத் திங்களில் திரும்பிவிட வேண்டும். திரும்பி வருவதாக உறுதி கூறிக் கெடு வைக்கும் காலம் தைத்திங்கள் ஆகும் - என்றெல்லாம் நச்சினார்க்கினியர் உரையில் விளக்கம் செய்துள்ளார். அவர் தமது உரைக்குச் சான்றாக, நாம் மேலே முதலில் எடுத்துக்காட்டிய அகநானூற்றுப் பாடலையே தாமும் எடுத்துக் குறிப்பிட்டுள்ளார். இது கொண்டு, அந்த நாளில் தமிழர்கள் தைத்திங்களுக்குத் தந்திருந்த இன்றியமையாமையை உணரலாம். ஈண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/28&oldid=1323592" இலிருந்து மீள்விக்கப்பட்டது