பக்கம்:தைத் திங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

15



சிலர் இருப்பர். அவர்களுக்கு மார்கழித் திங்களில் செல்வாக்கு மிகுதி. அவர்கள் கோலம் போடும்போது சுற்றிலும் பல பெண்கள் சூழ்ந்துகொண்டு பார்ப்பர். பின்னர்த் தனியாக அவர்களிடம் சென்று புதுப்புது வண்ணக் கோலங்கள் போடப் பாடம் வாங்கிக் கொள்வர். கோலச் சுவடிகளைப் பார்த்துப் பார்த்துச் சிறு பெண்கள் கோலம் போட்டுப் போட்டுப் பயிற்சி பெறுவர். வேறு வேலைகளை மறந்து பகல் நேரத்திலும் கோலமும் கையுமாக இருக்கும் பைத்தியங்களும் உண்டு, மணமாகாத கன்னிப் பெண்டிர் இந்தக் கலைத்துறையில் பேரார்வம் காட்டுவர், ஆனால், "லேடீஸ் கிளப்புகளுக்குச் செல்பவர்களுள் ஒரு சிலர்க்கும் இந்தக் கலைக்கும் இடைவெளி மிகுதி. அந்தோ அவர் அளியர்!

பூச்சாணம்:

நாடொறும் வைகறையில் தெரு வாயிற்படியில் போடும் வண்ணக் கோலத்தின்மேல் பூச்சாணம் வைக்கப் பெறும். அஃதாவது - சிறிது பசுச்சாணம் எடுத்துப் பிடித்துக் கோலத்தின் நடுவே வைப்பர். அந்தச் சாணத்தில் பூக்களைச் செருகுவர். சில இடங்களில் பெரும்பாலும் பூசணிப்பூவே வைக்கப் பெறும். அப்பொழுது மிகுதியாக மலரும் பூ அது. அந்த மலர் மங்கலமான மஞ்சள் நிறம் உடையதாகவும் சாணத்தில் செருகுவதற்கு ஏற்றவாறு 'புனல்'போல் நீளமாகவும் காணக் கவர்ச்சியாகவும் இருக்கும். அதனாலேயே அது தேர்ந்தெடுக்கப்பட்டது போலும்'!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/32&oldid=1323596" இலிருந்து மீள்விக்கப்பட்டது