பக்கம்:தைத் திங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

17

மாவைக் கரைத்துக் கொண்டு, கலையாமல் சில நாட்களுக்கு இருக்கும்படியாக நிலையான கோலம் போடுவர். ஈண்டு ஒரு செய்தி நினைவு கூரத்தக்கது: பெண்டிர் மார்கழித் திங்களிலே கோலம் போட்டு வந்தது, தைத் திங்களிலே வித விதமான நிலையான வண்ணக் கோலங்கள் போடுவதற்காகப் பெற்று வந்த பயிற்சியேயாகும். இந்தக் கருத்து ஒத்துக் கொள்ளப்படும் என நம்புகிறேன்.இதற்குச் சான்று வேண்டுமா? பொங்கல் விழா முடிந்ததும், சிறப்புக் கோலம் போடும் செயலும் முடிவு பெற்றுவிடுகிற ஒன்றே போதுமே!

எதிராலே அரங்கத்திலே நாடகம் நடிப்பதற்காக ஒரு திங்கள் காலம் ஒத்திகையும் பல முன்னாயத்தங்களும் நடைபெறுகின்றன. நாடகம் முடிவுற்றதும் ஒத்திகையும் முற்றுப்புள்ளி பெறுகிறது. எனவே, தைப் பொங்கல் விழா என்னும் நாடகத்திற்காகச் செய்யப்பட்ட ஒத்திகையாகவும் முன்னாயத்தங் களாகவும் மார்கழி நடைமுறைகளைக் கொள்ளலாம். 'பீடை மாதம்' என்று பலரால் இழித்துரைக்கப் படுகின்ற மார்கழி பிறந்ததுமே, 'பொங்கல் மாதம் பிறந்து விட்டது' எனப் பெண்கள் கூறுவதிலுள்ள நுட்பம் இப்போது புலனாகலாம்.

பொங்கல் நாளில், வெள்ளையடித்தும் கோலம் போட்டும் வீட்டை அணி செய்வதல்லாமல், வாழை, கரும்பு, மாவிலை-வேப்பிலைத் தோரணம் முதலியன கட்டி அணி செய்வதும் உண்டு. எனவே, பொங்கல் விழா ஒரு மங்கல விழாவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/34&oldid=1323598" இலிருந்து மீள்விக்கப்பட்டது