பக்கம்:தைத் திங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

19


பல இடங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது. சங்க நூல்களில் உள்ள ஆட்சியைக் கொண்டு, இந்தத் திங்களுக்குத் 'தை' என்னும் பெயர் வைக்கப்பட்டதற்கு உரிய காரணத்தை உய்த்துணர முடிகிறது.

தைத் திங்களில் செய்யப்படும் அணி-அலங்காரம் முன்பு கூறப்பட்டது. தைத் திங்கள் என்பது அணி மிக்க-அலங்காரமான திங்கள் என்று அறியலாம். 'தை' என்னும் சொல்லுக்கு, அணி செய்தல் அலங்காரம் செய்தல்-அழகு செய்தல்-ஒப்பனை செய்தல் என்று பொருளாம். அதனாலேயே, அணி செய்யப்பெறும் இந்தத் திங்கள் 'தைத்திங்கள்' என்னும் அலங்காரப் பெயரால் வழங்கப்பெறுகிறது. அணி செய்தல் என்னும் பொருளில் 'தை' என்னும் சொல் சங்க நூல்களில் ஆளப்பட்டிருப்பதைப் பரக்கக் காணலாம். சில ஆட்சிகள் வருமாறு:-

புறநானூறு:


    'சென்னி பொலியத் தைஇ’ (126)
    'கண்ணி இலங்கத் தைஇ’ (353)
    வல்லோன் தைஇய வரிவனப் புற்ற' (33)
    'அடிபொலியக் கழல் தைஇய '(40)
    "செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ’(243)

பதிற்றுப்பத்து:

   'அவிரிழை தைஇ மின்னுமிழ்பு இலங்கச் சீர்மிகு முத்தம் தைஇய
   ......' (39)

பரிபாடல்:

    'தண்கமழ் சாந்தம் தைஇ வளியும்'(21)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/36&oldid=1323601" இலிருந்து மீள்விக்கப்பட்டது