பக்கம்:தைத் திங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

25


அறியலாம். எனவே, இதுகாறுங் கூறியவற்றால், தைத்திங்களின் இன்ப விளையாட்டுப் பொழுதுபோக்கு உணர்வு புலனாகும்.

தைக்குதிப்பு:

'தை' என்றாலே ஒருவகை மகிழ்ச்சி பெருக்கெடுப்பதை உலகப் பேச்சு வழக்கு ஒன்று உணர்த்துகிறது. சிறார்கள் மகிழ்ச்சி தாங்காமல் குதித்தால், அவர்களை நோக்கி, 'தைதை' எனக் குதிக்கிறார்கள் - என்று சொல்லும் வழக்காறு உலகியலில் உண்டு. குதிப் பதற்குத் 'தைதை எனக் குதித்தல்' என்ற பெயர் எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும்? வெளியில் கடைக்குச் சென்றுள்ள அம்மாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தை, அம்மா வந்தவுடன், அம்மாவந்துவிட்டார்கள் - அம்மா வந்து விட்டார்கள் என்னும் ஆர்வப் பொருளில் 'அம்மா-அம்மா’ என்று குதிப்பதைக் காண்கிறோம். அவாறே, தைத்திங்களை எதிர் பார்த்துக் கொண்டிருந்த சிறார்கள், தை வந்ததும், தைவந்து விட்டது-தை வந்து விட்டது என்னும் ஆர்வப் பொருளில் 'தை-தை' என்று கூவி மகிழ்ச்சியுடன் குதித்திருப்பார்கள். இந்த வழக்காறு, பின்னர், மகிழ்ச்சியுடன் குதிப்பதற்கெல்லாம் ஏற்பட்டிருக்கலாம். எனவே, 'தை-தை எனக் குதித்தல்'என்னும் வழக்காறு, தைத்திங்களை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வரவேற்பதைக் குறிக்கிறது என உய்த்துணரலாம். இவ்வளவு வரவேற்பிற்கு உரிய தைப்பொங்கல் விழா நடைபெறும் வரலாற்று முறையினை விவரமாகக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/42&oldid=1323609" இலிருந்து மீள்விக்கப்பட்டது