பக்கம்:தைத் திங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

29

தில்லை. எனவே, அந்தப் பகுதியினர் இதனை அறியார். சில ஊர்களில் கோயிலுக்கு எதிரே குழுவாக மூட்டம் போடாமல், மக்கள் தத்தம் வீடுகளுக்கெதிரே தனித்தனியாக மூட்டம் போடுவதும் உண்டு. இவர்கள் தம் வீட்டுப் பழைய கழிவுப் பொருள்களைப் போட்டுக் கொளுத்துவர். ஊர்ப் பொது மூட்டத்தில் சேர்ந்து கொள்ளாத இவர்கள், 'தாம் உண்டு-தம் காரியம் உண்டு' என்று போகும் 'பரந்த' நோக்கம் உடையவர்கள் போலும்!

போகி நாளின் வைகறையில் போகி மூட்டம் போடுவதே மரபு. ஒரு சில ஊர்களில் போகி நாளின் நள்ளிரவில்-அஃதாவது, தை முதல் நாள் வைகறையில் போகி மூட்டம் போடும் வழக்கம் உள்ளது. தை இரண்டாம் நாளாகிய மாட்டுப்பொங்கல் நாளில் வைகறையில் போகி மூட்டம் போடும் ஊர்களும் இருக்கின்றன. தென்னார்க்காடு மாவட்டத்தில் கடலூரைச் சேர்ந்த-அப்பரடிகள் கடலிலிருந்து கரையேறிய வண்டிப்பாளையம் என்னும் ஊரில் மாட்டுப் பொங்கல் நாளின் வைகறையில்தான் போகி மூட்டம் போடப்படுகிறது. என்றோ ஓராண்டில் போகி நாளன்று ஊரில் ஏதேனும் கேடு நேர்ந்திருக்கலாம்: அதனால் அவ்வூரார் போகி மூட்டத்தை மாட்டுப் பொங்கல் நாளுக்குத் தள்ளி வைத்திருக்கலாம். அதிலிருந்து ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் நாளன்றே போகி மூட்டம் போடும் வழக்கம் பின் பற்றப்பட்டிருக்கலாம். இப்படி ஏதோ தக்க காரணத்தாலேயே அவ்வாறு நிகழ்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/46&oldid=1328016" இலிருந்து மீள்விக்கப்பட்டது