பக்கம்:தைத் திங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

55


இவற்றையெல்லாம் மறந்து துறந்து, திரைப்படக் கொட்டகை வாயிலில் நெடுநீள் வரிசையில் (கியூவில்) கால் கடுக்கக் காத்து நின்று கொண்டிருக்கின்றனர். சிற்றூர்க் (கிராமியக்) கலைநிகழ்ச்சிகள் எல்லாம் வரலாறாகவும் இல்லாமல் இருந்த சுவடும் மறைந்து புதைபொருள் ஆராய்ச்சியாகப் போய் விட்ட இரங்கத்தக்க நிலைதான் இன்று பல இடங்களில் உள்ளது.

காணும் பொங்கலன்று யாரும் வேலை செய்ய மாட்டார்கள். பெரியவர்கள் உட்பட மக்களிடையே பல் வேறுவகை விளையாட்டுக்கள் இடம் பெற்றிருக்கும். ஆடவரும் மகளிரும் அழகுற ஆடை யணிகலன்கள் அணிந்துகொண்டு இன்பமாகக் காட்சியளிப்பர். மேலே குடம் கட்டி அடித்தல், வழுக்குக் கம்பம் ஏறுதல், பந்தயங்கள் ஆடுதல், குடை ராட்டினம் சுற்றுதல், கோலி குண்டு விளையாடல் முதலிய பலவகை ஆட்டங்கள் நடைபெறும்.சிறார்களுக்குப் பசியே தெரியாது. அனைவரும் ஆட்ட பாட்டங்களில் ஈடுபட்டுஅகமகிழ்வுறுவர்.

இந்த நாளில் சிறார்கள் உறவினர் ஊருக்குச் செல்வதுண்டு. புதுமண மக்கள் பொங்கல் விழாவை மாப்பிள்ளை வீட்டில் கொண்டாடிவிட்டு, பெண் வீட்டில் பொங்கல் மருவுண்ணுவதற்காகப் புறப்பட்டுச் செல்வதும் இந்தக் காணும் பொங்கல் நாளில்தான். பொதுவில், காணும் பொங்கல் விழா களிப்பு மிக்க ஒரு விழாவாகும். சிறப்பாக, பாட்டாளி மக்களுக்குப் பரிசளித்துப் பாராட்டு செய்யும் விழாவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/72&oldid=1323712" இலிருந்து மீள்விக்கப்பட்டது