பக்கம்:தைத் திங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

57


மேலும் ஒரு ரூபாய் சேர்த்து ஆயிரத்தொரு ரூபாயாக அளிப்பர். அதாவது. ஆயிரத்தோடு அறுபட்டு விடாமல் மேலும் தொடர்ச்சியிருக்க வேண்டும் தொடர்ந்த வளர்ச்சியிருக்க வேண்டும் என்பது இதன் குறிக்கோள். இது போலவே, ஞாயிறு வழிபாடு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காகத் தலை ஞாயிறு கொண்டாடப்பெறுகிறது. தலை ஞாயிறன்று சில குடும்பங்களில் கன்றுப் பொங்கல் விழா நடத்துவர். இன்னும் சில சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் உண்டு.

தலை வெள்ளி:

தலை ஞாயிறைப் போலவே, தைத் திங்களில் முதலில் வரும் வெள்ளிக்கிழமை 'தலை வெள்ளி' எனப்படும். இந்தக கிழமைகளில் சில குடும்பங்களில் 'அம்மன் வழிபாடு' நடைபெறும். காலையில் கூழ் படைப்பார்கள்; பின்னர் நண்பகலிலோ - இரவிலோ கொழுக் கட்டை முதலியவற்றுடன் சிறப்புணவு செய்து படைப்பர். வெளியூர்களில் வாழ்க்கைப் பட்டிருக்கும் புதுமணப் பெண்கள் இந்தத் தலை வெள்ளிப் படையலுக்குத் தாய் வீட்டிற்கு அழைத்து வரப்படுவதுண்டு.

மயிலார் படையல்:

சில பகுதிகளில் சில குடும்பங்களில் தைத் திங்கள் எட்டாம் நாள் 'மயிலார் படைத்தல்' என்னும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இது கன்னியர் கன்னிமார் களுக்குச் செய்யும் படையல் என்று சொல்லப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/74&oldid=1323715" இலிருந்து மீள்விக்கப்பட்டது