பக்கம்:தைத் திங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 தைத் திங்கள்


கன்னிமார் என்பவர் தெய்வ இனத்தினராம். இவர்கள் எழுவர் (ஏழு பேர்) எனச் சொல்லப்படுகின்றனர். "கன்னிமார் எழுவர்' என்பது உலக வழக்கு. இவர்களுக்குள் இளையவள் - முதியவள் என்றெல்லாம் உண்டு. எழுவருள் இளையவள், அறுவர்க்கு இளைய நங்கை’ எனச் சிலப்பதிகாரம்-வழக்குரை காதையில் குறிப்பிடப்பட்டிருப்பது காண்க.எழுவருள் இளையவள் ஓரளவுவிதந்து கூறப்பட்டிருக்கிறாள்.உலக வழக்கிலும் இவ்வாறு கூறப்படுகிறாள். 'இளையாள் கழித்த ஏழாம் நாள் மயிலார் படைத்தல்' என்று சிலரால் சொல்லப்படுகிறது. அங்ஙனமெனில்,-கன்னிப் பெண்கள்,தை முதல் நாள் இளையாளுக்கு நோன்பிருப்பர் என்பதும், இப்படி முறையே ஒரு கன்னித் தெய்வத்திற்கு ஒரு நாள் வீதமாக ஏழு நாளைக்கும் ஏழு கன்னியர்க்கும் நோன்பு கிடப்பர் என்பதும், எட்டாம் நாள் மொத்தமாக எல்லோருக்கும் சேர்த்துப் படையல் செய்வர் என்பதும், இதற்குத்தான் 'மயிலார் படைத்தல்' என்று பெயர் என்பதும் புலப்படும். சுருங்கக் கூறின், இது கன்னியர் நோன்பு என்பது தெளிவு.

இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் சில இடங்களிலேயே நடைபெறுவதாகத் தெரிகிறது. மற்ற இடத்தினர்க்கு இது முற்றிலும் புதுமையாகத் தோன்றும். இது கன்னியர் நோன்பு எனப்படினும், திருமணமான மகளிரும் இதில் கலந்து கொள்வதுண்டு.இவர்கள்மணமாவதற்கு முன் கன்னியராயிருந்தபோது இந்த நோன்பு நோற்றிருந்தனராதலின், மணமான பின்னும் இதனை விடாது தொடர்கின்றனர் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/75&oldid=1323716" இலிருந்து மீள்விக்கப்பட்டது