பக்கம்:தைத் திங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 59


மயிலார் படைக்கும் நாளன்று காலையிலிருந்தே மகளிர் உண்ணாது நோன்பு கிடப்பர். மாலையில் ஞாயிறு மறையும் வேளையில் படையல் செய்து உண்பர். மாலையில் படைக்கும்போது, ஆண் குழந்தை உட்பட-ஆண்கள் எவரும் வீட்டிற்குள் இருக்கக் கூடாது. ஆண்கள் அனைவரையும் வெளியே தள்ளித் தெருக் கதவைக் தாளிட்டு விட்டே பெண்கள் படைப்பர். இலை போடாமல் தரையைத் தூய்மை செய்து தரை மேலேயே உணவு பரிமாறிப் படைப்பார்களாம். உண்ணுவதும் இலையில்லாமல் தரையின் மேலேதான் நடை பெறுமாம். அன்றைக்குப் பெண்களே முதலில் உண்பர். அவர்கள் உண்டு முடித்த பின்னரே தெருக் கதவைத் திறந்து, ஆடவர்களை உள்ளே விட்டு உணவு படைப்பர், மதுரையில் அங்கயற்கண்ணி அம்மைக்கே முதல் பூசனை நடைபெறுவது போல, மயிலார் படையலன்றைக்குப் பெண்களுக்கே முதல் விருந்து நடைபெறும். மற்ற நாட்களிலும் சில வீடுகளில் சில பெண்கள் முதலில் உண்டுவிடுகிறார்களே என்று இங்கு யாரும் வினவ வேண்டா ஆடவரும் மகளிரும் சரிநிகர் சமன்!

மயிலார் படையல் செய்யும்போது மயில்தோகை வைத்துப் படைக்கப்படுகிறது. நீளத் தோகை கிடைக்கா விடினும் சிறு இறகாயினும் வைக்கப் பெறுகிறது. மயில் இறகிலிருந்து அரையங்குலச் சிறு துணுக்கையாவது சோற்றுடன் வைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/76&oldid=1323647" இலிருந்து மீள்விக்கப்பட்டது