பக்கம்:தைத் திங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

71


விடல்' என்று பெயர் வழங்கப்படுகிறது. மகளிர் ஐயனார் கோயிலில் பொங்கல் செய்து மாவிளக்குப் போட்டுப் படைத்து மகிழ்வர்.

ஊருணிப் பொங்கல்:

ஊருணிப் பொங்கல் என்பது பொருள் பொதிந்த தொடர்.பொங்கல் நாளில் அவரவர் வீட்டில் பொங்கல் செய்து உண்பர்; ஆனால் ஊருணிப் பொங்கல் வேறு. ஊரார் அனைவரும் ஒரு பொது இடத்தில் ஒன்று கூடிப் பொங்கல் செய்து உண்பது ஊருணிப் பொங்க லாகும். சில ஊர்களில், தைத் திங்களில் ஒரு திங்கட் கிழமையில் ஊரார் அனைவரும் கொட்டு முழக்கத்துடன் ஐயனார் கோயிலுக்கோ, ஆற்றங் கரைக்கோ, மலைச்சாரலுக்கோ,காட்டுச்செறிவுக்கோ சென்று, பொதுவில் பொங்கல் செய்து உண்ணும் மரபு இன்றும் உள்ளது. இதற்காக முன் கூட்டியே வீடுதோறும் பணமும் உணவுப் பொருள் களும் தண்டப்படும். ஊருணிப் பொங்கல் நாளன்று ஆடவரும் மகளிரும் அணி செய்துகொண்டு ஒரு சேரக் குழுவாகக் கொட்டு முழக்குடன் குறிப்பிட்ட பொது இடம் சேர்ந்து விழாவயர்வர். பொங்கல் படையலுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும் உண்டு. பகுத்துண்ணுதல் - பல்லாரோடு உண்ணுதல் என்னும் பண்பினை இங்கும் காணலாம். விழா முடிந்ததும், வந்தது போலவே அனைவரும் கொட்டு முழக்குடன் குழுவாகச் சென்று வீடு சேர்வர். இந்த ஊருணிப் பொங்கல் விழா ஊர் மக்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த 'டானிக்' ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/88&oldid=1323672" இலிருந்து மீள்விக்கப்பட்டது