பக்கம்:தைத் திங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75 தைத் திங்கள்

என்னும் பகுதியால் நன்கறியலாம். இன்னும், சிலப்பதிகாரம்,கொங்குவேள் மாக்கதை ஆகிய தமிழ்க் காப்பியங் களிலும் பிற தமிழிலக்கியங்கள் சிலவற்றிலும், நீராடும் கலை நிகழ்ச்சி, ஒரு தனிப்பெரு விழா நிகழ்ச்சியாக ஓவியப்படுத்திக் காட்டப்பட்டுள்ளமை ஈண்டு நினைவுகூரத்தக்கது. ஆண்டாள் அருளிய திருப்பாவையிலும் மணிவாசகர் அருளிய திருவெம் பாவையிலும். நீராடுதல் தெய்வத் தொடர்பான ஒருவகை நோன்பின் கூறாகப் போற்றிப் புகழ்ந் துரைக்கப் பெற்றுள்ளது.

தைந் நீராடும் தவம்;

நீராடலுக்குள்ளேயே, சித்திரை நீராடல், ஆதிரை நீராடல், தைந் நீராடல் என்றெல்லாம் காலத்தையொட்டிப் பல்வேறு நீராடல்கள் சொல்லப் படுகின்றன. இவற்றுள், தைந் நீராடுதல் பற்றியே பழந்தமிழ் நூல்கள் மிகவும் பெருமையாகப் பேசி யுள்ளன.தைத் திங்களில் நீராடுதல் ஒரு தவச் செயலாக மதிக்கப் பட்டுள்ளது. மணமாகாத கன்னியர் தமக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என வேண்டித் தைத் திங்களில் நீராடித் தவங்கிடப் பார்களாம், இப்போது மார்கழி நோன்பு நோற்பதாகச் சிலரால் சொல்லப்படுகிறது. அப்போது தை நோன்பு இருந்ததாகவே தமிழ் நூல்கள் கூறியுள்ளன. சங்க நூலாகிய கலித்தொகையிலிருந்து ஒரு காட்சி காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/95&oldid=1323684" இலிருந்து மீள்விக்கப்பட்டது