பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தைப்பாவாய்!


விண்ணார் இருளும் விதிர்குளிரும் போயொடுங்க
மண்ணார் உலகமிது வீழ்துயிலின் சோர்வகற்றிக்
கண்ணாள வந்தக் கனகமணிச் செஞ்சுடரைப்
பண்ணார் தமிழெடுக்கப் பாடிப் பரவுகின்றத்
தண்ணாரும் மெல்லோசைத் தங்கச் செவியுற்றாய்
வண்ணமொளிர் மாக்கோல வாசலெலாம் சீலமுறப்
பெண்ணாம் மதியாய்ப் பிறங்குமொரு சீமாட்டி
எண்ணம் களிக்க எழுந்து வா, தைப்பாவாய்!

முற்றக்கொடி படரும் முல்லைப்பூ கண்சிமிட்ட
வற்றல் பிறையும், வடிபனியும் வாழ்த்துரைக்க
நெற்றித் திருப்பொட்டும், நீள்மார்பின் மங்கலமும்
உற்ற அறங்காட்ட உள்ளறைக்குள் சென்றடைத்துபூ
பற்றும் பெரும்வாழ்வின் பங்காளன் தோள்தழுவிச்
சிற்றரும்பு, வெண்ணகையாள் தேன்கனவைச் சீய்த்ததற்கு
நற்றலமே. ஓடிவா. நாணுறாதே தைப்பாவாய்!