பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவைகளைப் பற்றிப் பெரியோர் அருளிய வாக்குகளைக் கற்பவர்களும், சிறப்பித்துப் பேசுகிறவர்களும், சிரவணம் செய்து கொண்டிருப்பவர்களுமாகிய திருமாலடியார்களின் பொற் பாதங்கள் ‘என் தலைமேற் சூடும் மலராகும்’ என்று பணிவுடன் போற்றுவர் அழகிய மணவாளதாசர்.

இந்நூலாசிரியர் டாக்டர் என். சுப்பு ரெட்டியார் அவர்கள் பழுதறவோதிப் பகவானின் கருணை வெள்ளம் கோக்கப் பெற்றவர்கள். இத்திருப்பதிகளை நேரில் கண்டும் அவற்றின் மீதுள்ள திருப்பாசுரங்களைக் கற்றும் கேட்டும் துதித்தும் தாம் இயற்றியுள்ள ‘தொண்டை நாட்டுத் திருப்பதிகள்’ என்னும் இந்நூலின் வாயிலாக இத்திருப்பதிகளின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே மானசீகமான திவ்வியதேச யாத்திரைக்கு நம்மைப் இருப்பூர்திகளிலும் பேருந்துகளிலும் அழைத்துச் செல்லுகின்றார். திருக்கோயில்களிலுள்ள மதில்கள் மண்டபங்கள் மூர்த்திகள் தீர்த்தங்கள் இவற்றையெல்லாம் சுற்றிக் காட்டுகின்றார், சுட்டியும் உரைக்கின்றார்; திருத்தலங்களின் வரலாறுகளையும் கூறுகின்றார். அத்துடன் நில்லாது ஆழ்வார் பெருமக்கள் மங்களாசாசனம் செய்து எம்பெருமான்களை அநுபவித்த நெஞ்சு நெக்குருகும் சில பாசுரங்களையும் பாடி நம்மையும் அவ்எம்பெருமான்கள் எம்பெருமாட்டிகள் இவர்கள் எதிரே கொண்டு நிறுத்தி ஆனந்தக் கடலில் ஆழ்த்துகின்றார். இவற்றிற்கிடையே வைணவ சமயக்கருத்துகள் பலவற்றை நம் சிந்தையில் தூவி சிந்தனையையும் கிளறுகின்றார்.

இந்த நூலினைப் பயிலும் நாமும், இந்த நூலாசிரியரின் துணையின்றியே, தனியாக நம் குடும்பத்துடன் திவ்விய தேச யாத்திரையை உண்மையிலேயே உடனே மேற்கொள்ளலாமா என்கின்ற எண்ணத்தை நம்மிடையே எழுமாறு தூண்டிவிட்டுக் கொண்டே நம்மையும் தம்முடன் அழைத்துச் செல்கின்றார். இந்நூலின் வாயிலாக நாமும் மானசீகமான நம்முடைய திவ்வியதேச யாத்திரையை நிறைவு செய்து கொண்டோம் என்ற மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்கின்றோம். அத்தகைய நூல் நிலைத்து வாழ்க.

டாக்டர் ரெட்டியார் அவர்கள் சைவக் குடும்பத்தில் தோன்றியவராயினும் வைணவத்தில் பற்றும் ஈடுபாடும் உடையவர்; ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் ஆழங்கால் பட்டவர்; கண்ணன் கழல் இணைகள் நண்ணும் மனமுடையவர்.

vi