பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்டாகத் திகழும் உயர் குணச் செம்மல். இறையன்பிலும் மெய்ப்பொருட் கருத்துகளிலும் ஆழங்கால்பட்டு நிற்கும் இப்பெரியாரின் அணிந்துரை இந்நூலின் பெருமையை உயர்த்துகின்றது என்பது என் நம்பிக்கை. அணிந்துரை அருளிய பெரியாருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்றும் உரியது.

தமிழ் கூறு நல்லுலகில் டாக்டர் மு. வரதராசனை அறியாதார் இல்லை. தமிழிப் பெரியார் திரு.வி.க வைப் போலவே ‘மு.வ.’ என்ற இரண்டு எழுத்துப் பெயருடன் தமிழ் நெஞ்சங்களில் நிலையான இடம் பெற்று வாழும் பெரியார் இவர். கடந்த முப்பதாண்டுகளாக இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கள் பெற்றவன் யான். அவர் ஒரு நிறைகுடம்; நல்லவர்; வல்லவர்; இறையன்பினர். பல்வேறு வகை இலக்கியங்களின் ஆசிரியர். உயர்ந்த குறிக்கோள் நெறியுடன் வாழும் சீலம் நிறைந்த நெஞ்சத்தினர். இத்தகைய பெரியார் “தன் புகழ் சேட்டார்போல் தலை சாய்த்து நிற்கும்”[1] சான்றோராகத் திகழ்வதை அவருடன் நெருங்கிப்பழகும் ஒரு சிலரே நன்கு அறிவர். எல்லோருக்கும் இனியராகத் திகழும் இவருக்கு என் நீண்ட கால நட்பின் நினைவாக இந்நூலை அவருக்கு அன்புப் படையலாக்கி மகிழும் பேறு பெறுகின்றேன். இவர் ஆசியால் இந்நூல் தமிழ் கூறு நல்லுலகத்தில் பெருமிதத்துடன் உலவும் என்பது என் திடமான நம்பிக்கை.

இந்த நூலை யான் எழுதி வெளியிடுவதற்கு என்னுளே தோன்றாத் துணையாக நின்று எனக்கு எல்லா நலன்களையும் ஈந்து என்னை இயக்கி நன்னெறிப்படுத்தும் திருவேங்கடமுடையானை மனம் மொழி மெய்களால் இறைஞ்சி வாழ்த்தி வணங்குகின்றேன்.

“கண்ணன் கழல்இணைகள்
நண்ணும் மனம்உடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே.”[2]

திருப்பதி 1.8.1973 ந. சுப்பு ரெட்டியார்.

  1. நெய்தல் கலி - 2.
  2. திருவாய். 10.5 : 1.

xi