பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தொண்டை நாட்டுத் திருப்பதிகள்



இங்ஙனம் திருவல்லிக்கேணியில் நிற்கும் பார்த்த சாரதிப் பெருமானைப் பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து மனம் உருகி மகிழ்ந்துள்ளனர். இந்தத் திவ்வியதேசத்தில் பார்த்தசாரதி, மந்நாதன், சக்கரவர்த்தித் திருமகன், தெள்ளிய சிங்கர், தேவப் பெருமாள் (வரதராசர்) ஆகிய ஐந்து மூர்த்திகளும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவர்களாதலின் இது ‘பஞ்சமூர்த்தித் தலம்’ என்று வழங்கப்பெறுகின்றது.

இந்த ஐந்து எம்பெருமான்களையும் சேவித்துக் கொண்டு, பக்திப் பெருக்குக் கரைபுரண்டோடும் நிலையில் வாகனங்கள் இருக்கும் மண்டபத்தில் வந்து அமர்கின்றோம். பெரிய திருமொழிப் பாசுரங்களை மீண்டும் ஒருமுறை மனமுருக ஒதிப் பக்திப் பெருக்கில் திளைக்கின்றோம். இந்நிலையில் திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் அவர்களின் பாடல் நினைவுக்கு வருகின்றது.

“திரிந்துஉழலும் சிந்தைதனைச் செவ்வே நிறுத்தி
புரிந்து புகன்மின்; புகன்றால் மருந்துஆம்
கருவல்லிக்கு; ஏணிஆம் மாக்கதிக்கு;
கண்ணன் திருவல்லிக் கேணியான் சீர்”[1]

(உழலும்-அலையும்; செவ்வே-நேராக; புரிந்து-விரும்பி; புகல்மின் - கூறுங்கள் ; கருவல்லி-கருப்பமாகிய கொடி, மாகதி-முக்தி; சீர்-புகழ்)

என்ற அப்பாசுரத்தை ஒதிஓதி உளங்கரைகின்றோம். திருவல்லிக்கேணியில் கோயில் கொண்டருளிய எம்பெருமான் கண்ணபிரானின் பார்த்தசாரதியின் - புகழைப் பக்தியுடன் கூறக்கூற அது நம் பிறவிப்பிணிக்கு மருந்து ஆகும் நிலையினையும், முக்தி உலகிற்குக் செல்லத் துணைபுரியும் ஒளி ஆகும் நிலையினையும் உணர்கின்றோம். இல்லையா?

❖❖❖

  1. 23. நூற். திருப். அந். - 94.