பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நீர்மலை நீர்வண்ணன்

எம்பெருமான் எண்ணற்ற கல்யாண குணங்களை யுடைவன் என்பது வைனர்களின் கொள்கை, இவற்றுள் எம்பெருமாட்டியின் புருஷகாரத்தின் ஊன்றுதலினால் அவனிடம் மறைந்து கிடந்த வாத்சல்யம், சுவாமித்துவம், சௌசீல்யம், சௌலப்பியம், ஞானம், சக்தி முதலான குணங்கள் தலையெடுத்து நின்று சேதநனுக்கு உதவுகின்றன என்பதாகச் சாத்திரங்கள் கூறும். ஈண்டு வாத்சல்யம் என்பது, கன்றினிடத்தில் பசு இருக்கும் இருப்பு. சுவாமித்துவம் என்பது, உடையவனாய் இருக்கும் இருப்பு. செளசில்யம் என்பது, உயர்ந்தவன் தாழ்ந்தவனோடு புரையறக் கலத்தல். செளலப்பியம் என்பது, எளியனாய் இருக்கும் இருப்பு. ஞானம் என்பது, அறிவு. சக்தி என்பது, சாமர்த்தியம். இந்த ஆறினுள் முதலில் குறிப்பிட்ட நான்கு குணங்களும் சேதநன் இறைவனைப் பற்றுவதற்குத் துணை செய்யக்கூடியவை. இறுதியாகவுள்ள இரண்டு குணங்களும் பகவான் தன்னை வந்தடைந்த சேதநனுடைய காரியத்தைச் செய்வதற்குப் பயன்படுபவை.

ஈண்டுக் குறிப்பிட்ட ‘முமுட்சுப்படி என்னும் நூலே, ‘இங்குச் செளலப்பியத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்’ என்று குறிப்பிடுகின்றது. கண்ணன் கீதையில், பரமபுருடனாகிய தன்னை மலர்கள் முதலிய பொருள்களைக் கொண்டு வழிபட்டு வாழவேண்டும் என்று கருதும் சேதநன் தன் கையில் கிடைத்ததொன்றைத் திருமேனியாய் ஏறியருளப் பண்ணி, ‘எம்பெருமானே, இங்கு நீர் எழுந்தருளியிருக்க வேண்டும்’ என்று வேண்டும்போது அதற்கு இணங்கித் தான் பரநிலையில் செய்யும் விருப்பத்தை அந்தத் திருமேனியில் செய்து

1. புருஷகாரம் தகவுரை, பரிந்துரை, எம்பெருமான் முகங்கொடுக்காமல் இருக்கும்பொழுது குற்றம் செய்த சேதநர்களைப் பற்றிக்கொண்டு காப்பாற்றத் தகுந்தவர்கள் இவர்கள்!” என்று தகவுரை கூறுவதால் ‘புருஷகார பூதை’ என்ற பெயரால் வழங்கப் பெறுபவள் எம்பெருமாட்டி.

2. முமுட்சு - 136 - 137. 3. முமுட்சு - 139.