பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

பெற்றவன். இந்த மாமல்லன் ஆதரவில் உருவாகிய சிற்பக்கூடத் தையே அதனை உருவாக்கிய சிற்பிகள் ‘மாமல்லபுரம்’ என்று வழங்கியிருக்க வேண்டும். இந்த மாமல்லபுரத்தையே திருமங்கையாழ்வார் ‘கடல் மல்லை’ என்று தம் பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார், ‘காஞ்சிபுரம்’ என்ற பெயர் ‘காஞ்சி’, ‘கச்சி’ என்றெல்லாம் மருவி வழங்குவது போலவே, ‘மாமல்லபுரம்’ என்ற பெயரும் ‘மாமல்லை என் மருவிற்று. இதுவே எப்படியோ “மகாபலிபுரம்’ என்று திரிந்து வழங்கி வருகின்றது. இவ்வாறு திரிந்து வழங்குவதுகூட வியப்பன்று. ஆனால், இத்தனை விவரங்களும் தெரிந்த அரசினரும் இலட்சக்கணக்காகச் செலவு செய்து கட்டின விருந்தினர் விடுதிக்கு ‘மகாபலிபுரம் விருந்தினர் விடுதி” என்று பெயர் சூட்டியிருந்தனர். அண்மையில் இது திருத்தப்பெற்றது மகிழ்ச்சிக்குரியது.

காஞ்சியிலிருந்து பேருந்து மூலம் வந்து கொண்டிருக்கும் நாம் ‘கடி பொழில்சூழ் தலசயனத்தை அடைகின்றோம். பேருந்து மாமல்லபுரத்தை அடைந்ததும், அது தலசயனப் பெருமாளை வலம்வந்து அவர் திருக்கோவிலுக்கு இடப்பக்கமாக வந்து நம்மை இறக்கிவிடுகின்றது. எத்தனையோ காலமாகத் தலசயனரைச் சேவிக்க வேண்டும் என்று துடித்து நிற்கும் நாம் முதலில் தலசயனர் ஆலயத்தினுள் நுழைகின்றோம். திருமங்கை யாழ்வார் பெற்ற உணர்ச்சியை நாமும் அடைகின்றோம்.

“எம்மானைக் கண்டு கொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே’

(கடி-வாசனை; பொழில்-சோலை)

என்று ஆழ்வார் பெற்ற எக்களிப்பினைப் பெறுகின்றோம். கிழக்கே திருமுக மண்டலங்கொண்டு புயங்க சயனத் திருக்கோலத்தில் பள்ளி கொண்டுள்ள தலசயனத்துறைவாரையும் அவர் சந்நிதிக்கருகே தனிக்கோயில் கொண்டு சேவை சாதிக்கும் நிலமங்கை நாய்ச்சியாரையும் வணங்குகின்றோம்.

எம்பெருமான் பரமபத நாதன் அர்ச்சையில் நின்ற நிலையிலும், இருந்த நிலையிலும், கிடந்த நிலையிலும் நடந்த

2. பெரி. திரு. 2. 5: 3, 5, 6.