பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

வெண்ணெய் உண்ணும் காட்சி இவற்றை விளக்கும் சிற்பங்களைக் காணலாம். தெற்கே திரும்பிக் குன்றினை நோக்கியுள்ள மேட்டின்மீது ஏறினால் அடுக்கடுக்காய்ப் பல மண்டபங்களைக் காணலாம். இலக்குமி மண்டபம், வராக மண்டபம், மகிஷாசுரமர்த்தனி மண்டபம் என்று பல மண்டபங்கள் உள்ளன. இவை யாவும் மலையைக்குடைந்து உண்டாக்கப் பெற்றவை. ஒரு மண்டபத்தில் பூமியை இடந்த வராக மூர்த்திக்கு எதிரே உலகளந்த பெருமாள் காட்சியளிக்கின்றார். மற்றொரு மண்டபத்தில் மகிஷாசுர மர்த்தனிக்கு எதிரில் புயங்க சயனர் காணப்பெறுகின்றார். இந்தச் சிற்பங்கள் யாவும் அர்த்த சித்திரச் சிற்பங்கள் (Bas Relief), இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நேரம் போவது கூடத் தெரியவில்லை. கலைவளம் காலவெள்ளத்தையும் மறக்கச் செய்து விடுகின்றது.

இன்னும் மலைமேல் பார்க்க வேண்டியவை பல உள்ளன. வேலை தொடங்கப்பெற்று முற்றுப்பெறாத கோயில் ஒன்று மலைமீது உள்ளது. அதற்கு முன்புறம் பெரிய கோபுரம் ஒன்று நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பெற்று நின்று போயுள்ளன. அதனைக் கண்ட வண்ணம் அடுத்துக் காணப்பெறும் கலங்கரை விளக்கத்தை அடைந்து அதன்மீது ஏறிப் பார்க்கின்றோம். திருமங்கையாழ்வார் காலத்தில் பொற்குவியல்களும் நவமணிக் குவியல்களும் யானைகளும் சுமக்கப்பெற்ற மரக்கலங்கள் பல்வேறு நாடுகளினின்றும் மாமல்லபுரத் துறைமுகத்திற்கு வந்திருக்க வேண்டும்.

“புலன்கொள்நிதிக் குவையோடு

புழைக்கைமா களிற்றினமும் நலங்கொள்நவ மணிக்குவையும்

சுமந்தெங்கும் நான்றொசிந்து கலங்களியங் கும்மல்லைக்

கடல்மல்லைத் தலசயனம்’

(புலன்கொள்-இந்திரியங்களைக் கவர்கின்ற; நிதிக்குவை-பொற்குவியல்; புழைக்கை துவாரம் உள்ள துதிக்கை; நான்று இசிந்து-(சரக்குகளின் கனத்தால்) மிகவும் உள்ளிழிந்து கலங்கள்-கப்பல்கள்: இயங்கும்-சஞ்சரிக்கும்)

என்ற பாசுரப் பகுதியால் இதனை அறியலாம். பிறிதோரிடத்திலும் இதனைக் கருத்திற்கொண்டே,

12. பெரி. திரு. 2, 6 : 6.