பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்மல்லைக் கிடக்கும் கரும்பு 173

இந்த ஞானப்பிரானைப் பற்றி வரலாறு ஒன்று உண்டு. திருக்கடல்மல்லையில் அரிசேகரன் என்ற அரசன் நாள்தோறும் உச்சிக் காலத்தில் அண்மையிலுள்ள திருவிடவெந்தை’ என்ற திவ்விய தேசம் சென்று அங்கு எழுந்தருளியுள்ள ஆதிவராக மூர்த்தியைச் சேவித்து விட்டு ஊருக்கு வந்து திருவாராதனை முடித்த பிறகு உணவு கொள்வது வழக்கம். ஒருநாள் வராகமூர்த்தி இவ்வரசனின் பக்தியை உலகத்தினருக்கு அறிவிக்கத்திருவுள்ளங் கொண்டார். தானே ஒரு கிழ அந்தணர் உருவு கொண்டு பூமிப்பிராட்டியாரை ஒரு பெண்ணாக அழைத்துக் கொண்டு திருக்கடல் மல்லைக்கு எழுந்தருளினார். அப்பொழுதுதான் அரசன் திருவிடவெந்தைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அந்தணர் அரசன் எதிர்சென்று பசிக்கு உணவுதருமாறு கேட்டார். அரசன் தான் திருவிடவெந்தை சென்று திரும்பி வந்தவுடன் அவருக்கு வேண்டுவன நல்குவதாகக் கூறினான். கிழவரோ அச்சமாதானத்தைக் கேட்பதாக இல்லை. ஆகவே, அரசன் அந்தக் கிழவரை வராகமூர்த்தியாக பாவித்து உபசரித்து திருவாராதனை சமர்ப்பித்தான். உடனே வராகமூர்த்தி அரசனது பக்திக்கு மெச்சி பூமிப்பிராட்டியைத் தனது வலப்புறத்தில் வைத்துக் காட்சி தந்தருளி ஞானோபதேசமும் செய்தார். இந்த நிலையில்தான் திருக்கடல் மல்லையில் எழுந்தருளியுள்ளார். இங்கு எம்பெருமான் தனது வலக்காலை ஆதிசேடன் மீது வைத்துக் கொண்டும் இடத்துடையின் மீது பூமிப்பிராட்டியைத் தாங்கி கொண்டுமுள்ளார். இந்தத் திருவல எந்தையைச் சேவித்து மகிழ்கின்றோம். இந்தப் பாசுரத்தைக் கொண்ட பதிகம் முழுவதையும் அவன் சந்நிதியிலேயே ஓதி உளங்கரைகின்றோம்.

எம்பெருமான் எழுந்தருளியுள்ள இந்தக் குகைக் கோயில் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பெறுகின்றது. குகையிலுள்ள சுவரில் சிம்மவிஷ்ணு, முதலாம் மகேந்திரவர்மன் முதலியோரது சிலைகள் செதுக்கப் பெற்றுள்ளன. இவற்றி லிருந்து இக்கோயில் ஆறாம் நூற்றாண்டில் இருந்தது என்பதைத் தெளிவாக அறிகின்றோம்.

இக்கோயிலை விட்டுச் சாலையை அடைந்து சாலை வழியாகக் கிழக்கு நோக்கி நடக்கின்றோம். ‘ஐந்து இரதங்கள்’ என்ற கைகாட்டி காட்டும் திசையை நோக்கிச் சாலைவழியாக நடந்து சென்று கால்வாய் ஒரமாகவுள்ள பஞ்சபாண்டவ இரதங்களைக் காண்கின்றோம். பாண்டவர்கட்கும் இந்த இரதங்கட்கும் யாதொரு தொடர்புமில்லை. என்றாலும், அவை