பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

அளிக்கிறது. இஃது உங்கள் குற்றங்களை நினைத்து நீங்கள் மனங்கவன்று அஞ்சுதல் வேண்டா; என்னை வந்தடையுங்கள். யான் உங்களை ஏற்றுக் கொள்வேன்’ என்னும் அன்பைக் காட்டும் வாத்சல்யத்தின் அறிகுறியாகும். எம்பெருமான் தலையில் கவித்திருக்கும் இரத்தின் முடி அவன் எல்லா உலகங்கட்கும் தலைவனாயிருப்பதனை அறிவிப்பதாகும். அன்பர்களைக் காணுங்கால் எம்பெருமானுக்கு உண்டாகும் முகமலர்ச்சியும் புன்சிரிப்பும் அவர்களுடன் புரையறக்கலக்கும் சீலகுணத்தைத் தெரிவிப்பனவாகும். ஆசனபதுமத்தில் அழுந்தி நிற்கும் எம்பெருமானுடைய இரண்டு திருவடிகளும் அனைவரும் பற்றுதற்கு இடம் தந்து நிற்கின்றன. இத்தன்மை எம்பெருமானின செளலப்பியத்தை வெளிப்படுத்துகின்றது.

“திருக்கையிலே பிடித்த திவ்வியாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற

கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும், ஆசனபத்மத்திலே

அழுந்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம்’

என்று முமுட்சுப்படி வாக்கியத்தில் குறிப்பிடப்பெறும் எம்பெருமானின் நிலையே நமக்குப் புகலிடமாகும். “க்யூ’ வரிசையில் பல மணி நேரம் நின்று நடந்து சென்று திருவேங்கட முடையானைச் சேவிக்கும் எண்ணற்ற பக்தர்கள் இந்த அநுபவத்தைப் பெற்றிருப்பார்கள் என்பது உறுதி. இங்ஙனம் அவனைச் சேவிக்கும் பக்தர்கள்,

‘முடிச்சோதி யாய்உனது

முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி நீநின்ற

தாமரையாய் அலர்ந்ததுவோ?”

என்று நம்மாழ்வார் பெற்ற அநுபவத்தைத் தாமும் பெறுவதை நன்கு உணர்வார்கள்.

திருப்பாதிரிப் புலியூரில் ஒரு விடுதியில் தங்கி அதி காலையில் நீராடி, தூய ஆடைகள் அணிந்து திருக்கோயிலுக்குப் போகச் சித்தமாக இருக்கும் நம் மனத்தில் மேற்கூறிய கருத்துகள் குமிழியிட்ட வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பேருந்து ஒன்றில் ஏறி மேற்குத் திசையில் சுமார் மூன்று கல் தொலை விலுள்ள திரு அயிந்திரபுரம்’ என்ற திவ்விய தேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். சாலையின் இரு புறங்களிலும்

2. முமுட்சு - 142 3. திருவாய் - 3, 1 : 1