பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

(வீண்-ஆகாயம்; கா-சோலை; நீரால்-தன்மையினால், கூத்து-அதிசயம்; அளிக்கும்-காக்கும்; நெடும்பிழைகள்-பெரிய குற்றங்கள்; நிலம்-பூமி: பொறுக்கும் நேரால்-பொறுத்துக் கொள்ளும் தன்மையினால்)

என்று போற்றி மகிழ்கின்றான். பிறகு நான்முகன் வேண்டுகோட்கிணங்கி அவனுக்குக் காட்சி கொடுத்த கோலத்திலேயே அங்கையே தங்கி விடுகின்றான் பேரருளாளன். இன்னும் நம்போன்ற சம்சாரிகளின் விபரீத ஞானத்தையும், அதனால் வரும் விபரீதாசாரத்தையும் அடையாதபடி காத்து வருகின்றான். வேண்டுவார்க்கு வேண்டிய வரங்களை ஈந்து வாழ்வித்தருள் கின்றான்.

இதனை எண்ணியவண்ணம் திருக்கோயிலினுள் நுழைகின்றோம். மேலைக் கோபுரவாயில்தான் பக்தர்கள் இவனைக் காணும் முக்கிய நுழைவாயிலாக அமைந்துள்ளது. திருக்கோயில் 1200 அடி நீளமும் 800 அடி அகலமும் உடைய மாபெரும் மதில் சூழ்ந்த இடத்தினுள் அமைந்துள்ளது. கோபுரத்தினுள் நுழைந்து பரந்த மைதானத்தைக் கடந்து செல்லுங்கால் நல்ல உயரமான துண்களும் எழிலுடன் கூடிய கோபுரமும் உடைய நாலு கால் மண்டபம் நம் கண்ணில் படுகின்றது. அதனைக் கண்டு களித்துக்கொண்டே கோபுரத்துடன் கூடிய மகா மரியாதை வாயிலையும் கடந்து திருமஞ்சன மண்டபத்திற்கு வருகின்றோம். வடபக்கமாகத் திரும்பிப் பன்னிரண்டு படிக்கட்டுகளில் ஏறிக்கடந்து ஒரு மகாமண்டபத்தை அடைகின்றோம். இந்த மகா மண்டபத்தையும் அதற்கு மேற்குப் புறமாயுள்ள முகமண்டபத்தையும் கடந்து பெருந்தேவித்தாயார் சந்நிதியை அடைகின்றோம். அவளைச் சேவித்து அவளுடைய திருவருளுக்குப் பாத்திரமாகின்றோம். தாயார் உடுத்தியிருக்கும் ஆடையும் அணிந்திருக்கும் நகைகளுமே அவள் பெரிய இடத்துத் தேவி என்பதைப் புலப்படுத்தி நிற்கும். செப்புச் சிலையாகவும் கற்சிலையாகவும் திகழ்கின்ற அவளுடைய திருமுகத்தைத் தவிர அவள் திருமேனி முழுவதும் நவரத்தின் மயமாகவே காட்சியளிக்கும். அவளுடைய அருள் பெற்று அவளிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்புகின்றோம்.

திரும்பவும் படிகள் இறங்கி பெரிய திருவடிகளின் சந்நிதிப்படிகளைக் கடந்து அவரை எதிர்நோக்கி யோக நிலையில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் காட்சி தரும் குகை நரசிம்மரைச் சேவிக்கின்றோம். இவர் ஒரு குகை விமானத்தின் கீழ் இருந்து