பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கச்சிக் கார்மேனி அருளாளர்

7

(புள்-கருடன்; துத்தி-படங்களிலுள்ள பொறி; இறை-தலைவன்)

என்றும் மங்களாசாசனம் செய்து இனியராகின்றார். திருமங்கையாழ்வார் இந்த அத்திகிரித் திருமாலை,

“வரந்தரு மாமணிவண்ணன்”[1]

என்று போற்றிப் புகழ்கின்றார். பெருந்தேவனார் என்ற புலவரும்,

“நீலமே! காரின் முகிலே! நெடுங்கடலின்
கோலமே! அத்திகிரிக் கோமானே! -மூலமென
மாத்தா மரைமடுசில் மால்யானை ஓலமிட
காத்தாய்! கடைபோகக் கா”

என்று பாடிப் பரவசப்படுகின்றார். இத்தகைய எம்பெருமானை - வரதராசனை - நாமும் மனமாரச் சேவிக்கின்றோம்.

மூலவரை வணங்கிய நம்முடைய கவனம் உற்சவர்மீது செல்லுகின்றது. இவர் பேரழகு வாய்ந்தவர். இவருடைய முகத்திலுள்ள வடுக்கள் யாவும் போரில் ஏற்பட்டதாகக் கூறுவர். சற்றுப் பின்சாய்ந்து மிடுக்காகக் காட்சி அளிக்கும் இவரைப் பல கோலங்களில் அணி செய்துப் பார்க்க விரும்புகின்றவர்கள் உற்சவ காலங்களில் சென்று சேவிக்க வேண்டும். வாகனங்களில் உலாவரும் காட்சிகள் கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும். முகம்மதியப் படையெடுப்பின் காரணமாக இந்த மூர்த்தி கி.பி. 1690 இல் திருக்கோயிலினின்றும் எடுத்துச் செல்லப்பெற்று உடையார் பாளையத்தில் பத்திரப்படுத்தி வைக்கப் பெற்றது என்றும், மீண்டும் கி.பி. 1710 இல் தோடர்மால் என்பவர் மூலம் திருக்கோயிலுக்குக் கொண்டுவரப் பெற்றது என்றும் அறிகின்றோம். இதனை நினைவுபடுத்தும் விழா ஒன்று இன்றும் நடைபெற்று வருகின்றது.

திருக்கோயிலை விட்டு வெளியே வருமுன் திருக்கோயிலின் திருமுற்றத்திலுள்ள நாலுகால் மண்டபத்தில் சற்று அமர்ந்து வரதராசரின் பெருமையைச் சிந்திக்கின்றோம். சுவாமி தேசிகனின் திருப்பாசுரம் நம் நினைவிற்கு வருகின்றது.

  1. பெரி. திரு - 2. 9:3.