பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

என்று பாசுரத்தை முழக்கி ஒலி செய்வதாகக் கற்பனை செய்து கொள்ளுகின்றோம். இந்தக் கருட சேவையைக் காண்பதற்காக வீதிகளில் காத்துக்கிடக்கும் மக்கட் கடலை நோக்கி ‘அஞ்சேல்’ என்று அருள்புரிகின்றான் அத்திகிரி அருளாளன். திருவாழி திருச்சங்குகளுடன் அவன் கருடன்மீது கம்பீரமாக எழுந்தருளும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அத்திகிரி அண்ணலின் திருவருளுக்குப் பாத்திரமானவர்கள் எண்ணற்றவர்கள். அவர்களுள் சிலரைப் பற்றி நினைக்கிறோம். அவர்களுள் ‘நல்லார் பரவும் இராமாநுசர்’ முதலாவதாகக் குறிப்பிடத் தக்கவர். இவர் காஞ்சி வரதராசரையே திருவாராதனப் பெருமாளாகக் கொண்டிருந்தவர். துணைவியுடன் காஞ்சியில் இல்லறத்தை மேற்கொண்டு வாழ்ந்து பின்னர் துறவறத்தை நாடிப் பெற்ற உயர்குணச் செம்மல். இவர் காஞ்சியில் வாழ்ந்தபொழுது பேரருளாளன் திருமஞ்சனத்திற்கு இரண்டு கல் தொலைவிலுள்ள சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்தம் கொணரும் கைங்கரியத்தைச் செய்து வந்தார். இராமாநுசருக்குப் பின் வைணவக் கோட்டையைக் கட்டிப் பாதுகாத்தவர் பேரறிவாளர் வேதாந்த தேசிகர் என்பவர். இவரும் அத்திகிரி அருளாளனிடம் அளவற்ற பக்தியுடையவர். இவர் துளவமுடி அருள்வரதர்மீது சில பிரபந்தங்களை இயற்றியமையை மேலே குறிப்பிட்டோம். அந்த எம்பெருமானிடம் சரணம் புகுந்தமையை,

“முத்திதரு நகரேழின்
முக்கியமாம் கச்சிதனில்
அத்திகிரி அருளாளர்க்(கு)
அடைக்கலம்நான் புகுந்தேனே”[1]

(ஏழு நகர்-காஞ்சி, அயோத்தி, மதுரை, மாயை, காசி, அவந்தி, துவாரகை).

என்ற ‘அடைக்கலப் பத்தின்’ பாசுரப் பகுதியால் அறிகின்றோம்.

இராமாநுசருடைய ஆசான் என்று சொல்லத்தக்க பெருமையையுடைய திருக்கச்சி நம்பியும் அத்திகிரி அண்ணலின் திருவருளுக்கு ஆளானவர்; அவருக்கு ஆல வட்டம் வீசும் கைங்கரியத்தை மேற்கொண்டிருந்தவர். இதனால் “பெரு மாளோடு நேர்முகமாய் பேசும் பேறு பெற்றிருப்பவர்” என்று மக்களால் ஒரு முகமாய்க் கொண்டாடப்பெற்றிருந்த பெருமை

  1. தேசி. பிரபந்-237