பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கச்சிக் கார்மேனி அருளாளர்

11

வாய்ந்தவர் இவர். இவர் இராமாநுசருக்குப் பேரருளாளன் திருவுள்ளமாக வெளியிட்ட ‘ஆறு வார்த்தைகளும்’ இராமாநுசர் தம் உள்ளத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பிய அடிப்படைக் கொள்கைகளைத் தழுவியனவாகும். அந்த ஆறு வார்த்தைகளைப்பற்றியும் சிந்திக்கின்றோம்: முதலாவது, திருமாலே பரம்பொருள் என்பது. இரண்டாவது, சீவான் மாவுக்கும் பரமான்மாவுக்கும் உள்ள வேற்றுமையைக் குறிப்பிடுவது. மூன்றாவது, பிரபத்தியே (சரணாகதியே) சிறந்த முத்திநெறி என்பது. நான்காவது, யாக்கையின் முடிவில் உள்ளத்தை இறைவனிடம் ஒருமைப்படுத்த வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை. ஐந்தாவது, யாக்கை முடிவில் பாகவதர்கட்கு வீடுபேறு உறுதி. ஆறாவது, பெரிய நம்பியை ஆசாரியனாகக் கொள்ள வேண்டும் என்பது. இதனால் இவரையும் இராமநுசர் தம் ஆசாரியர் அறுவருள் ஒருவராகக் கருதலாயினர் என்பதையும் நினைக்கின்றோம்.

இராமாநுசருடைய சீடர் கூரத்தாழ்வான் என்பவர்; திருவரங்கத்தமுதனாரால்,

“வஞ்ச முக்குறும்பாம்
        குழியைக் கடக்கும் நம்கூரத்தாழ்வான்”[1]

(வஞ்ச முக்குறும்பு-கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு, குலச்செருக்கு)

என்று பாராட்டப் பெறும் அருங்குணச் செம்மல். இவர் வரதர்மீது ‘வரதராஜஸ்தவம்’ என்ற தோத்திரம் பாடியது பற்றிய நிகழ்ச்சி நம் நினைவுக்கு வருகின்றது. இராமாநுசர் திருவரங்கத்தில் வாழ்ந்த போது தம் இருகண்களையும் இழந்த ஆழ்வான்மீது ஆரா அன்பு கொண்ட கருணைக் கடலான இராமாநுசர் ஒருநாள் ஆழ்வானை அழைத்துக் காஞ்சி வரதராசர்மீது தமக்குக் கண்தரவேண்டும் என்று ஒரு தோத்திரத்தைப் பாடி விண்ணப்பிக்குமாறு கூறினார்.

‘வரதரைத் தோத்திரம் செய்வேன்; ஆனால், எனக்குக் கண்தரவேண்டும் என்று கேட்க என் உள்ளம் இசைய வில்லையே’ என்றார். எனினும், தன் குருநாதர் வற்புறுத்தலுக்கு இணங்க தோத்திரத்தை முற்றுப்பெறச் செய்தார். அதில், ‘எப்போதும் காண்பதற்குத் தகுதியான, உலக இயற்கைக்கு அப்பாற்பட்ட, திவ்வியமான கண்களை அடியேனுக்கு அருளவேண்டும்’ என்று விண்ணப்பித்தார்.

  1. இராமா.நூற்-7.