பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொன்னவண்ணம் செய்த பெருமாள்

15

என்பது அப்பெரியாரின் திருவாக்கு.

அந்த வரலாறு இதுதான்: திருமழிசையாழ்வார் காஞ்சியில் வாழ்ந்த காலத்தில் கணி கண்ணன் என்ற புலவன் ஒருவன் இவருக்குப் பரமசீடனாகவும் இணைபிரியாத நண்பனாகவும் இருந்தான். ஒரு கிழக்தாசியும் ஆழ்வாரிடம் பக்தி பூண்டு அவர் இருந்த இடத்தைத் தூய்மை செய்து மெழுகிக் கோலமிட்டு வந்தாள். அவள் ஆழ்வாரின் திருவருளால் எழில் மிகுந்த இளநங்கையானாள். அக்காலத்தில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னன் அவளது பேரழகில் ஈடுபட்டு அவளைத் திருமணம் புரிந்து பட்டத்தரசியாகவும் ஆக்கிக் கொண்டான். அவள் மூலமாக அவ்வரசன் கணிகண்ணணைக் குறித்தும் திருமழிசை யாழ்வாரைக் குறித்தும் வெகுவாகக் கேள்வியுற்றான். ஒருநாள் கணிகண்ணனை அழைத்து, ‘புலவரே, உம் ஆசாரியரை நம் அரண்மனைக்கு அழைத்து வாரும். அவர் என்னை வாழ்த்திப் பாடியருள வேண்டும்’ என்று வேண்டினான். கணிகண்ணன் ‘எம் குருதேவர் அரசர்களை மதித்துப் பாடார்; அவருடைய தமிழ் வைகுந்தச் செல்வனார் ஒருவருக்கே உரியது’ என்று மறுமொழி பகர்ந்தான். அரசன் கணிகண்ணன் முன் பொன்னும் நவஇரத்தினங்களையும் குவிக்கச் செய்து ‘நீராவது என் மீது கவிபாட வேண்டும்’ என்று வற்புறுத்தி வேண்டினான். ‘ஒடும் பொன்னும் ஒக்கவே நோக்கும் பாகவத சிரோ மணியாகிய கணிகண்ணன்,

“நாக் கொண்டு மானிடம் பாடேன்”[1]

என்ற தன் குருநாதரின் கொள்கையே தன் கொள்கையுமாகும் என்று கூறி அரசன் வேண்டுகோளுக்கு ஒருப்படவில்லை. அரசன் சினமுற்று அவனை ஊரை விட்டு அகலும்படி ஆணையிட்டான்.

கணிகண்ணன் தன் குருநாதரை அடைந்து அரண்மனையில் நடந்தவற்றை விண்ணப்பம் செய்து தனக்கு விடையருளுமாறு வேண்டினான். திருமழிசை ஆழ்வார் புன்முறுவலுடன் சீடனை நோக்கி, ‘அன்புச் சீடனாகிய நீ

  1. நான்.திருவந்-75; “வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்”(திருவாய் 3.9:9) என்ற நம்மாழ்வார் வாக்கு ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது.